இந்தோனேசியாவில் சுனாமி தாக்கியது எப்படி?
ஜாவா, சுமத்ரா தீவுகளுக்கு இடையே அமைந்துள்ள, சுந்தா நீரிணை அருகே கரகட்டாவ் தீவில் எரிமலை ஒன்று இருக்கிறது. இந்த சுந்தா நீரிணையானது ஜாவா கடலையும், இந்தியப் பெருங்கடலையும் இணைத்து காணப்படுகிறது. இந்த எரிமலையின் ஒரு பகுதி நீருக்கடியில் உள்ளது.
இந்தோனேசியா நேரப்படி இன்று (23/12/2018) அதிகாலையில் இந்த எரிமலை வெடித்து சிதறியது. இதிலிருந்து வெளியான பாறைக்குழம்பு, நிலத்தின் அடியில் உள்ள குளிர்ந்த பாறைகளுக்கு இடையில் செல்லும்போது, நிலத்தின் மேற்பரப்புக்கு கீழ் சரிவை உண்டாக்கி நில அடுக்குகளில் அதிர்வை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக எழுந்த சுனாமி பேரலைகள், இந்தோனேசியாவின் சுந்த் ஸ்ட்ரெய்ட் கடற்கரையை சுற்றியுள்ள பகுதிகளை தாக்கியது. மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் எழுந்த சுனாமி அலைகளால் வீடுகள், மேம்பாலங்கள், சாலைகள் பெரும் சேதமடைந்தன. சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
மிக மோசமான இந்த பேரழிவு இதுவரை 168 உயிர்களை பறித்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை அதிகமாகும் என அஞ்சப்படுகிறது.