ஆந்திராவுக்கு நகரும் பெய்ட்டி புயல்: வட தமிழகத்திற்கு மழை வாய்ப்பில்லை – சென்னை வானிலை ஆய்வு மையம்…!!
ஆந்திராவை நோக்கி நகரும் பெய்ட்டி புயல், வட தமிழகத்திற்கு மழையைக் கொடுக்காது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள பெய்ட்டி புயல் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே திங்கள் கிழமை பிற்பகலில் கரையைக் கடக்கும் என்று கூறியுள்ளார்.
பெய்ட்டி புயலால் முதலில் வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்ட நிலையில், தற்போது மழைக்கு வாய்ப்பு இல்லை என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மீனவர்களுக்கு மட்டுமே எச்சரிக்கை நீடிப்பதாக அவர் கூறியுள்ளார்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள பெய்ட்டி புயலால், நாகை மாவட்டம் வேதாரண்யம், புதுச்சேரி மற்றும் சென்னை காசிமேடு பகுதியில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. பலத்த காற்றும் வீசுவதால் படகுகளை மீனவர்கள் பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைத்தனர்.