காஷ்மீரில் தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினர் இடையே துப்பாக்கிச்சூடு
காஷ்மீரில் நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். காயமடைந்த இரண்டு ராணுவ வீரர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவுவதும் அதை முறியடிக்கும் முயற்சியில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது. இத்தகைய சம்பவங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு பாதுகாப்புப் படையினர் நேற்று நள்ளிரவு முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது அந்தப் பகுதிகளில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் படையினரும் எதிர்தாக்குதலில் ஈடுபட்ட நிலையில், இந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர். அப்பகுதிகளில் இருந்து வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அங்கு தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது.