உலக கோப்பை ஹாக்கி அரையிறுதியில் இங்கிலாந்து-பெல்ஜியம், ஆஸ்திரேலியா-நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்
உலக கோப்பை ஹாக்கி தொடரில் இன்று நடைபெறும் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து பெல்ஜியத்தையும், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா நெதர்லாந்தையும் எதிர்கொள்கிறது.
14-வது உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டி வரும் இத்தொடரின் காலிறுதி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், அரை இறுதிக்கு நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, இங்கிலாந்து, பெல்ஜியம் ஆகிய அணிகள் தகுதி பெற்றன.
இதனையடுத்து இன்று நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில், இங்கிலாந்து, பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன. 2-வது அரை இறுதியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் தலா 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள நிலையில், கடந்த உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் நெதர்லாந்து தோல்வியடைந்து கோப்பையை இழந்தது குறிப்பிடத்தக்கது.
சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் இந்த ஆட்டம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.