17ம் தேதி மத்தியப்பிரதேச முதலமைச்சராக பொறுப்பேற்கிறார் கமல்நாத்….!!
மத்தியப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக கமல்நாத் தேர்வு செய்யப்பட்டார். 17ம் தேதி அவர் முதலமைச்சராக பொறுப்பேற்கிறார்.
போபாலில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மத்திய பிரதேசம் மாநிலத்தின் முதலமைச்சராக கமல்நாத் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜனதா வசம் இருந்த ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றியது. மத்திய பிரதேசத்தில், மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கமல் நாத், மூத்த தலைவர்கள் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, திக்விஜய்சிங் ஆகியோர் முதலமைச்சருக்கான போட்டியில் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில், திக்விஜய்சிங், கமல்நாத்துக்கு ஆதரவு தெரிவித்ததால், கமல்நாத் மற்றும் சிந்தியா இடையே போட்டி நிலவி வந்தது. பின்னர் போபாலில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில், சிந்தியாவின் முழு சம்மதத்துடன், மத்திய பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக கமல்நாத் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவர் 17ம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.