இந்தியாவுக்குள் சினிமா வந்தது இங்கிருந்துதான்….!!
சினிமா அடைந்த பெருவெற்றி கடந்த 100 ஆண்டுகளில் கலையுலகின் பெரும்புரட்சி. ஆனால் முதல் திரைக்காட்சி எங்கிருந்து வந்தது என்பது தெரியுமா? விக்டோரியா ஹாலில் நடந்த திரையிடுதல் தான் தமிழகத்திற்கும் சினிமாவிற்கும் ஏற்பட்ட முதல் தொடர்பு என்பது நாம் கவனிக்க மறந்த வரலாறு. 1895 ல் தான் உலகிலேயே முதன் முதலில் சினிமா கண்டுபிடிக்கப்பட்டது.
லூம்யர் பிரதர்ஸ் 1895,டிச 28 அன்று சலனப்படம் காட்டும் கருவியைக் கண்டறிந்தனர். அடுத்த இரண்டே ஆண்டுகளில் இந்தியா வந்துவிட்டது இந்தப் படங்காட்டும் முறைமை. படம் என்பதை விட அதனை அடுத்தடுத்து வரும் தொடர் படங்களின் தொகுப்பு (கிட்டத்தட்ட ஒரு ஸ்லைடுஷோ ) என்று குறிப்பிடுவதே சரி.
ரயில் ஓடுவது, ஊழியர்கள் வெளிவருவது என மெளனப்படமாகக் காட்டப்ட்ட இந்தப் படங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. தெரு ஓரங்கள், பூங்காக்கள் என நடந்து கொண்டிருந்த சினிமா அடுத்தடுத்து தன் வளர்ச்சியை எட்ட இந்த வரவேற்புதான் காரணமானது.
வார்விக் மேஜர் மற்றும் ரெஜினால்ட் அயர் எனும் இரு ஆங்கிலேயர்கள் இந்தப்படங்கள் காட்டுவதற்கான நிரந்தர அரங்கம் ஒன்றை ஏற்படுத்த விரும்பினர். 1900 ஆண்டு ஒரு அரங்கம் கட்டினர் அதுதான் இன்றைய சென்னையின் அண்ணா சாலையில் இன்றும் நிற்கும் முதல் திரையரங்கமான எலக்ட்ரிக் தியேட்டர். இது 1913ல் தான் கட்டப்பட்டதாக ஒரு சர்ர்ச்சையும் உண்டு. இதன் நுற்றாண்டைக் கொண்டாடும் விதமாக இந்திய தபால் துறை 2000 ம் ஆண்டில் இதற்காகத் தபால்தலை ஒன்றும் வெளியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.