"அனுமனுக்கு சாதி சான்றிதழ்'' மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சமாஜ்வாடி(லோகியா) கட்சி…!!
அனுமனுக்கு சாதி சான்றிதழ் கேட்டு வாரணாசி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராஜஸ்தான் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்து கடவுள் அனுமன் ஒரு தலித் என்று குறிப்பிட்டுள்ளார்.இவரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.இதை அரசியல் விவாதப்பொருளாகினர் அரசியல் கட்சியினர்.இதற்கிடையே பாரதீய ஜனதா கட்சியில் இருந்து விலகிய பெண் எம்.பி. சாவித்ரி பாய் புலே, உயர் ஜாதிய பிரிவினர் கடவுள் அனுமனை கொத்தடிமையாக பயன்படுத்தி வருகின்றனர்.உயர் ஜாதிய பிரிவினர் தலித்துகள் பிற்படுத்தப்பட்டோரை குரங்குகள், அரக்கன் என்றும் கேலி செய்கின்றனர் என்றும் அவர் பரபரப்பு தகவலை தெரிவித்தார். இந்நிலையில் வாரணாசி மாவட்ட ஆட்சியரிடம் அனுமனுக்கு சாதி சான்றிதழ் கேட்டு மனு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை சமாஜ்வாடி(லோகியா) என்ற கட்சியின் வாரணாசி மாவட்ட இளைஞர் அணித் தலைவர் ஹரிஷ் மிஸ்ரா வாரணாசி மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மனுவை கொடுத்துள்ளார்.அந்த மனுவில் அனுமனுக்கு சாதிச் சான்றிதழ் தருமாறு கேட்டு அனுமனின் புகைப்படம் ஒன்றும் ஒட்டப்பட்டு இருந்தது. மனுவில் அனுமனின் தந்தை மகராஜ் கேசரி என்றும் , தாயார் அஞ்சனா தேவி என்றும் , அனுமாரின் பிறப்பிடம் வாரணாசி சங்கத் மோச்சன் கோவில், வயது அழிவற்றது, பிறந்த ஆண்டு எல்லை இல்லாதது என குறிப்பிடப்பட்டு இருந்தது.இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் அனுமனுக்கு ஒரு வாரத்துக்குள் சாதி சான்றிதழ் வழங்காவிட்டால் மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கையும் சேர்ந்து அந்த மனுவில் விடுக்கப்பட்டுள்ளது.