மத்திய நீர்வளத்துறைக்கு எதிராக புதுச்சேரி அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு
மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவதற்கான திட்ட வரைவு அனுமதிக்கு எதிராக புதுச்சேரி அரசும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு என்ற இடத்தில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட முடிவு செய்துள்ளது. இது தொடர்பான திட்ட வரைவுக்கு மத்திய நீர்வளத்துறை திடீரென அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
மத்திய நீர்வளத்துறையின் இந்த முடிவுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழக அரசு உடனடியாக சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்டி மேகேதாட்டுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் இயற்றியது. இந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேகேதாட்டு அணைக்கு மத்திய நீர்வளத்துறை வழங்கிய அனுமதியை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி, புதுச்சேரி அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது.
ஏற்கனவே தமிழக அரசும் இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்குகள் அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளன.