ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதலை நிறுத்த மியான்மருக்கு ஐ.நா. எச்சரிக்கை!!
ஐ.நா.:
ஆயிரகணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவத்தினர் நடத்தி வரும் தாக்குதலை நிறுத்திக் கொள்ள மியான்மர் அதிபர் ஆங் சாங் சுகிக்கு இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று ஐநா செயலாளர் ஆன்டோனியா கட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் கூறுகையில், ”இந்த சூழ்நிலையை அவர் மாற்றவில்லை என்றால் நிலைமை பயங்கரமாக இருக்கும். இதன் பிறகு எதிர்காலத்தில் இந்த பிரச்னைக்கு எவ்வாறு தீர்வு கிடைக்கும் என்பது தெரியவில்லை. ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீண்டும் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மியான்மர் ராணுவத்தினர் தற்போதும் அவர்களது நடவடிக்கையை தொடர்ந்து கொண்டு இருக்கின்றனர்” என்றார்.
கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி ரோஹிங்கியா தீவிரவாதிகள் போலீசார், சோதனை சாவடிகள் மீது தாக்குதல் நடத்தி 12 பேரை கொலை செய்ததை தொடர்ந்து இத்தகைய நடவடிக்கைகளை பாதுகாப்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் காரணமாக நோபல் பரிசு வென்ற ஆம் சாங் சுகி பல தரப்பில் இருந்து விமர்சனங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நியூயார்க்கில் நடக்கும் ஐநா பொது மன்ற கூட்டத்தில் ஆம்சாங் சுகி கலந்து கொள்ளவில்லை. தவறான தொடர்பு காரணமாக இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது. தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் வகையில் வதந்தி மற்றும் போலி செய்திகளால் இது போன்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
பங்களாதேஷில் 4 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இதற்கு மேல் அங்கு அடைக்கலம் கொடுக்க வாய்ப்பு இல்லை என்று அந்நாடு அறிவித்த பின்னரே கட்டரர்ஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.