மதுரை ஆட்சியர் திடீர் ஆய்வு : மாநகராட்சி ஊழியர்களுக்கு எச்சரிக்கை
கலெக்டர் வீரராகவராவ் டெங்கு காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதன் பொருட்டு அரசு ஊழியர் அடுக்குமாடி குடியிருப்புகள் நிறைந்த டி.ஆர்.ஓ. காலனியில் நேற்று காலை 7.30 மணிக்கு திடீர் ஆய்வு நடத்தினார். இதில் பல இடங்களில் சாக்கடை தேங்கி நிற்பதை கண்டார். அதில் கொசு உற்பத்தியாகி இருந்ததை கண்டதும், மாநகராட்சி ஊழியர்கள் வேகமாக வந்து கொசு ஒழிப்பு மருந்தை ஊற்றினர். உடனே கலெக்டர் கோபத்துடன் “நான் பார்த்த பிறகு, என் கண்முன் மருந்து ஊற்றி சமாளிக்கும் வேலை இருக்கக்கூடாது, சாக்கடை தேங்காமல் அடைப்புகளை அகற்ற வேண்டும், மருந்து ஊற்றி கொசு உற்பத்தியை தடுக்க தவறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் வீடுகளின் பின்பகுதியில் குப்பைகள் குவிந்து சுகாதார கேடாக இருந்தது. பின் அந்த வீடுகளில் குடியிருப்போரை நேரில் வரவழைத்து, “வீடுகளில் இருந்து குப்பைகளை வீசியது யார்?” என்று விசாரணை நடத்தினார். அதனை தொடர்ந்து மாநகராட்சி வடக்கு மண்டல உதவி ஆணையர் பழனிச்சாமியிடம் “இந்த காலனி முழுவதும் ஒரு நாள் மாஸ் கிளீனிங்” செய்யும்படி உத்தரவிட்டார். நவம்பர் 19ம் தேதி மாஸ்கிளீனிங்” செய்வதாக உதவி ஆணையர் பதில் கூறினார். இதன் பிறகு குடியிருப்போர், “வீடுகள் பழுதுபட்டு கிடப்பதை சீரமைக்க வேண்டும்” என்று கோரினர்.
இதுகுறித்து அங்கேயே வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளருடன் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டார். தொடர்பு கொண்ட பிறகு வீடுகளில் பழுது நீக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது என செயற்பொறியாளர் பதிலளித்தார்.