ரஜினியின் 2.0 எப்படி இருக்கு….2.0 படத்தின் திரை விமர்சனம்….!!

Default Image

2.0.. படம் எப்படியிருக்கிறது என்பதை தாண்டி இக்காலகட்டத்திற்கான கதையை சமரசம் இன்றி எடுத்ததற்காக இயக்குனர் ஷங்கர் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கு முதலில் பாராட்டுக்களை தெரிவித்து விடலாம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர், 550 கோடி பட்ஜெட் என மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கி இருக்கும் 2.0 படத்தின் கதை தான் என்ன? செல்போன் டவர்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால் சிட்டுக்குருவிகள் உள்ளிட்ட பறவையினங்கள் அழிந்து வருகின்றன. வரைமுறைக்கு உட்பட்டு செல்போன் நிறுவனங்கள் இயங்க வேண்டும், தேவைக்கு மட்டுமே செல்போன்களை பயன்படுத்த வேண்டும் என்பதே படத்தின் ஒருவரி கதை. இதனை சொன்ன விதத்தில் தான் பிரமாண்ட இயக்குனர் என்ற அடைமொழியை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

படத்தின் டைட்டில் காட்சியே கிராபிக்ஸ் தொழில்நுட்பம் எந்த அளவு இதில் கையாளப்பட்டுள்ளது என்பதற்கு சான்றாக இருக்கிறது. ரஜினி, அக்ஷய் குமார் என இரண்டு உச்ச நட்சத்திரங்களை வைத்துக் கொண்டு கதைக்கு ஏற்ற இடத்தில் மட்டுமே அவர்களுக்கான வாய்ப்பை வழங்கியுள்ளார் ஷங்கர். ஒரு இயக்குனராக கதை மேல் உள்ள அவரது அபார நம்பிக்கை பாராட்டுக்குரியது. மாறிவரும் தொழில்நுட்பத்தை எந்த அளவு சாத்தியப்படுத்த முடியும் என்ற அவரது பேராவல் படம் நெடுகிலும் தெரிகிறது. ஹாலிவுட் படங்கள் மட்டும்தான் கிராபிக்ஸ் கலையில் சிறந்த படங்களை எடுக்க முடியும் என்ற பிம்பத்தை ஒரு எல்லை வரை உடைத்து நொறுக்கி உள்ளது 2.0

படத்தில் மொத்தம் 2 பாடல்கள்.. அதனையும் படம் முடிந்தபிறகு காட்டக்கூடிய அளவு கதையின் ஓட்டத்திற்கு இடையூறாக பாடல்களை கூட இயக்குனர் வைக்கவில்லை என்பதில் இருந்தே திரைக்கதைக்கு ஷங்கர் கொடுத்துள்ள முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடிகிறது.

மொபைல் உள்ளிட்ட வலைதளங்களுக்குள் வாழ்க்கை சுருங்கிவிட்ட சூழலில், பரந்து விரிந்த பூமியில் பறவைகளுக்கும் இடம்உண்டு என்பதற்கான காட்சிகளை அழுத்தம், திருத்தமாக வைத்தது பாராட்டுக்குரியது. ரஜினி ரசிகர்களிடம் இவை எடுபடுமா? வணிகரீதியாக வெற்றியை பாதிக்குமா? என்பதை தாண்டி தான் சொல்ல வந்ததை அழுத்தம் திருத்தமாக கூறியதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

ரஜினி.. இவ்வளவு பெரிய பட்ஜெட், கடும் உடல் உழைப்பை கோரக்கூடிய கதைக்களம் இதற்கு பொருந்துகிறாரா என்றால், இல்லையென்றே சொல்ல வேண்டும். விஞ்ஞானி வசீகரன் கதாபாத்திரம், ரோபோ சிட்டி கதாபாத்திரம் போன்றவற்றில் முந்தைய படத்தில் இருந்த துள்ளல் இல்லை. 2.0 கதாபாத்திரம் வரும் கடைசி சில நிமிடங்களில் மட்டுமே பழைய ரஜினியை பார்க்க முடிகிறது. வயதுக்கு தக்க, கதைக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதை ரஜினி சிந்தித்து பார்க்க வேண்டும்.

செல்போன்கள் அதிரும் ஒலியை பின்னணி இசையாக கொண்டு வந்ததிலேயே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கதைக்கான நியாயத்தை செய்துள்ளார். அக்ஷய் குமாருக்கான அறிமுக காட்சிகள் துவங்கி க்ளைமேக்ஸ் வரை சிறிய சிறிய ஒலித்துணுக்குகளில் அசத்துகிறார்.

கிராபிக்ஸ் காட்சிகள் எவை, நேரில் எடுக்கப்பட்டவை எவை என்ற வித்தியாசம் தெரியாமல் கேமராவை கையாண்டதில் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷாவுக்கு ஒரு பொக்கேவை பரிசளிக்கலாம். குறிப்பாக க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சி கிராபிக்சும், ஒளிப்பதிவும் ஒன்றுக்கொன்று போட்டிப் போட்டு வேலைபார்த்துள்ளன. சவாலான படத்தொகுப்பை சாதுர்யமாக செய்துள்ளார் ஆன்டணி. ஆண்டாள் அருளிய திருப்பாவையை சொல்லி தானும் படத்தில் இருப்பதை வெளிப்படுத்தி உள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன்.

நல்ல கதைக்களம், முடிந்தவரை கிராபிக்ஸ் காட்சிகளை நம்ப வைக்கும் அளவுக்கு எடுத்துள்ளது, இவற்றைத் தாண்டி படத்தோடு நம்மால் ஒன்றிப் போக முடியாத அளவுக்கு சில விஷயங்கள் தடுக்கிறது. கதாநாயகி எமி ஜாக்சன், கொஞ்ச நேரம் வந்து போகும் குட்டி வில்லன் சுதன்ஷு பாண்டே, ஷங்கரின் டெம்ப்ளேட்டான வித்தியாசமான பழிவாங்கும் கொலைகள் போன்றவை நம்மை அசதிக்குள்ளாக்குகின்றன.

அறிவுரையைக் கூட ட்விட்டரில் இரண்டு வரிகளில் சொல்ல வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். இரண்டரை மணிநேரம் கிராபிக்ஸ் காட்சிகளோடு சொல்ல முயன்றது அலுப்பையும் தருகிறது.

அளவுக்கு அதிகமாக தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டாம் என்பதே 2.0 படத்தின் கதை. 2.0 படத்திற்கும் அதுவே பொருந்தும். அளவுக்கு அதிகமாகவே தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாம் படம் பார்க்கிறோமா? ப்ளே ஸ்டேஷனில் விளையாடுகிறோமா? என்பது தெரியவில்லை.2.0 பொம்மைகளை வைத்துக் கொண்டு பொறுப்புணர்வை போதிக்க வருகிறது.

DINASUVADU.COM 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்