சபரிமலை விவகாரம் ..!தீர்ப்பை அமல்படுத்த கூடுதல் காலஅவகாசம் கோரி தேவசம்போர்டு உச்சநீதிமன்றத்தில் மனு..!

 உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த கூடுதல் காலஅவகாசம் கோரி தேவசம்போர்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் புகழ் பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு 10-50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்ற நடைமுறை நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வந்தது. இதற்கு எதிராக பல்வேறு பெண்கள் அமைப்புகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. கடந்த செப்டம்பர் மாதம் 28-ந்தேதி நீதிபதிகள் அமர்வு, அய்யப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என்று தீர்ப்பு கூறியது.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த மாதம் 17-ந்தேதி அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த 10-50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதற்கிடையே, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி வழங்கி கூறிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு அமைப்பினர் மற்றும் தனிநபர்கள் தரப்பில் 48 மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணையை ஜனவரி 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கோரும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த கூடுதல் காலஅவகாசம் கோரி தேவசம்போர்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

Leave a Comment