ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம்…..வைகோ வலியுறுத்தல்….!!
சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் ஒன்றை தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்துள்ள சூடகொண்டப்பள்ளி ஊரைச்சார்ந்த, மனம் ஒருமித்து காதல் திருமணம் செய்து கொண்ட இருவரை கொடூரமாகக் கொலை செய்த கொடுமை பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. சாதி ஆணவப் படுகொலை செய்துள்ள குற்றவாளிகள் நாகரிக மனித சமூகத்தில் வாழவே தகுதி அற்றவர்கள். சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி, இக்கொடூரக் கொலை புரிந்தவர்கள் தப்பி விடாமல், நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற சாதி ஆணவப் படுகொலைகள் சர்வ சாதாரணமாக தொடர்ந்து நிகழ்ந்து வருவதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்கத் தனிச் சட்டம் ஒன்றை தமிழக அரசு கொண்டு வர வேண்டும். இன்றைய சூழலில் தமிழ்நாட்டில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலைமை ஏற்பட்டு வருவது மிகுந்த கவலை அளிக்கிறது. ஒடுக்கப்பட்ட தலித் மற்றும் பழங்குடி இன சிறுமி மற்றும் இளம்பெண்கள் பாலியல் வன்முறைக்கும், கொடூர கொலைக்கும் ஆளாக்கப்படும் கொடுமைகளைக் காவல்துறை புகாரைப் பதிவு செய்யக் கூட மறுப்பது அரசு நிர்வாகத்தில் புரையோடிக் கிடக்கின்ற ஆதிக்க மனப்பான்மையை எடுத்துக் காட்டுகிறது.
சாதி ஆணவப் படுகொலைகள் நடத்தும் கொடூரக் குற்றவாளிகள் மற்றும் சிறுமிகள், பெண்கள் மீது பாலியல் வன்முறைக் குற்றங்களில் ஈடுபடுவோர் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
dinasuvadu.com