வைரலாகும் வல்லபாய் படேல் சிலை….ஆகாயத்தில் இருந்து எடுக்கப்பட்ட அற்புத காட்சி…!!
ஆகாயத்தில் இருந்து எடுக்கப்பட்ட வல்லபாய் படேலின் சிலையின் தோற்றம் பிரம்மிப்பூட்டும் வகையில் உள்ளது.
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்பட்டவர், சர்தார் வல்லபாய் படேல். குஜராத் மாநிலத்தை சேர்ந்தவரான படேல், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியாகவும் பதவி வகித்தவர்.நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 550-க்கும் மேற்பட்ட குறுநில அரசுகளை இந்தியாவுடன் இணைத்தார். கடைசிவரை இணைய மறுத்த ஐதராபாத் நிஜாம், ஜூனாகத்(குஜராத்) நவாப் ஆகியோரை தனது வல்லமையால் இந்தியாவுடன் இணைய வைத்தவர்.
படேலுக்கு குஜராத் மாநிலம் நர்மதை மாவட்டத்தின் கெவாடியா என்ற கிராமத்தில் நர்மதை நதிக்கரையோரம் 182 மீட்டர்(597 அடி) உயரத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இது உலகிலேயே உயரமான சிலை ஆகும். அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை விட இரண்டு மடங்கு உயரம் கொண்டது. இச்சிலைக்கு ஒற்றுமைக்கான சிலை என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் சாது பேட் என்ற சிறு தீவில் சர்தார் சரோவர் அணை அருகே, இந்த சர்தார் வல்லபாய் படேலின் ‘ஒற்றுமைக்கான சிலை’ அமைந்துள்ளது. இது குஜராத்திற்கு பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளை வருகை புரிய வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று குஜராத்தில் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட ‘ஒற்றுமைக்கான சிலையை ஆகாயத்திலிருந்து படம் பிடித்திருக்கிறது. ‘ஸ்கை லேப்’ என்ற அமைப்பால் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. உலகின் மிக உயரமான சிலையின் இந்தப் படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
dinasuvadu.com