புளியங்கொட்டையில் சிக்குன்குனியாவுக்கு மருந்து…!!
புளியங்கொட்டைகளில் இருந்து எடுக்கப்படும் புரதத்தில் இருந்து சிக்குன்குனியாவுக்கு மருந்து தயார் செய்ய முடியும் என ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் கண்டறிந்து உள்ளனர்.
இந்திய தொழில் நுட்ப அமைப்பு (ஐ.ஐ.டி.) ரூர்கீயில் பணியாற்றி வரும் 2 பேராசிரியர்கள் சிக்குன்குனியாவுக்கு மருந்து கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதுபற்றி பேராசிரியர் சைலி தோமர் கூறும்பொழுது, இந்தியாவில் புளியானது பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது என்பது தெரிந்த விசயம். அது ஒரு சிறந்த ஆயுர்வேத உணவாக பயன்படுகிறது. அந்த மரத்தின் கனிகள், விதைகள், இலைகள் மற்றும் வேர்கள் ஆகியவை வயிற்று வலி, வயிற்று போக்கு மற்றும் வயிற்று கடுப்பு, பாக்டீரியா தொற்றுகள் மற்றும் ஒட்டுண்ணி தாக்குதல்கள், காயங்கள், மலச்சிக்கல் மற்றும் தீக்காயம் ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகின்றன என கூறினார்.இந்த நிலையில், செடிகளில் இருந்து எடுக்கப்படும் லெக்டின் என்ற ஒரு வகை புரதம் பல்வேறு வைரஸ்களுக்கு எதிராக செயல்படுவது பற்றி விரிவாக ஆய்வு நடத்தப்பட்டு வந்தது.
இதில், புளியங்கொட்டைகளில் இருந்து எடுக்கப்படும் லெக்டின்களில் என்-அசிட்டைல் கிளைக்கோசமின் (என்.ஏ.ஜி.) என்ற வேதி பொருள் உள்ளது கண்டறியப்பட்டது.இது வைரஸ்களுக்கான மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. வைரஸ்கள், செல்களுக்குள் நுழைவதனை தடுக்கும் வகையில் இது செயல்படுகிறது.
இதுபற்றி கூறிய தோமர், இந்த வகை லெக்டின்களால் சிக்குன்குனியா வைரஸ் 64 சதவீதம் நோய் தாக்கும் தன்மையை இழப்பதுடன், செல்களில் உள்ள ஆர்.என்.ஏ. வைரஸ்களின் அளவும் 45 சதவீதம் வரை குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது என கூறினார்.இதனால் புளியங்கொட்டைகளில் இருந்து எடுக்கப்படும் புரதத்தில் இருந்து சிக்குன்குனியாவுக்கு மருந்து தயார் செய்ய முடியும் என ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
சிக்குன்குனியா உள்ளிட்ட பல வைரஸ்களுக்கு நோய் எதிர்ப்பு மற்றும் தடுப்பு மருந்துகள் சந்தைகளில் இன்னும் கிடைப்பதில்லை. இதுபோன்ற வைரஸ்களால் ஏற்படும் நோய்களை தடுக்கும் நடவடிக்கைகளே இதுவரை ஒரே தீர்வாக உள்ளது என மற்றொரு பேராசிரியர் பிரவீந்திர குமார் கூறியுள்ளார்.இந்த வைரஸ் எதிர்ப்பு வேதி பொருளுக்கு உரிமை கோரி ஐ.ஐ.டி. ரூர்கியின் ஆய்வு குழுவினர் விண்ணப்பித்து உள்ளனர்.
dinasuvadu.com