ராமர் கோவில் கட்டுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது…உ.பி. துணை முதல்வர் பேட்டி..!!
அயோத்தியில் ‘ராமர் கோவில் கட்டுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது’ என உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுர்யா கூறியுள்ளார்.
சர்ச்சைக்குரிய ராம ஜென்மபூமி-பாபர் மசூதி பகுதியின் உரிமை தொடர்பாக நீண்ட காலமாக வழக்கு நடந்து வருகிறது. இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 29 முதல் அன்றாடம் விசாரிக்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டால் அறிவிக்கப்பட்டு அடுத்த வருடம் ஜனவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சட்டம் இயற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வலியுறுத்தியது. பிற இந்து அமைப்புகளும் ஆதரவு கோஷம் எழுப்பும் நிலையில் பா.ஜனதா தலைவர்களும் கோவில் கட்டப்படும் என தெரிவித்து வருகிறார்கள்.இந்நிலையில் அயோத்தியில் ‘ராமர் கோவில் கட்டுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது’ என உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுர்யா கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற மடாதிபதிகள் மாநாட்டில், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. இதுபற்றி உத்தரபிரதேச துணை முதல்–மந்திரி கேசவ் பிரசாத் மவுர்யா பேசுகையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பதில் பாரதீய ஜனதா எப்போதும் உறுதியாக இருந்து வருகிறது என்றும், அங்கு ராமர் கோவில் கட்டுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் கூறினார். என்றாலும் இந்த பிரச்சினை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் இருந்து வருவதால் மடாதிபதிகள் மாநாட்டில் வற்புறுத்தப்பட்டது பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும் கூறினார்.