சபரிமலைக்கு பெண் பத்திரிக்கையாளர்கள் வர வேண்டாம்…போராட்டக்குழு கடிதம்…!!
சபரிமலையில் பெண் பத்திரிக்கையாளர்களை பணியில் அமர்த்தாதீர்கள் என்று மீடியாக்களுக்கு போராட்டக்குழு கோரிக்கையை விடுத்துள்ளது.
கேரளாவில் உள்ள உலகப்புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு அளித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு வேகம் காட்டியது.
கடந்த மாதம் 17 ஆம் தேதி ஐயப்பன் கோவில் நடைதிறக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க கேரள அரசு தீவிரம் காட்டி போதுமான போலீஸ் பாதுகாப்பை உறுதி செய்திருந்தாலும் போராட்டக்காரர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்காமல் போராட்டம் நடத்தினர். கோயிலுக்குள் வர முயன்ற பெண்கள் திருப்பி அனுப்பப் பட்டனர். இதனால், பதற்றமான சூழல் ஏற்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயில் திறந்து இருந்த 5 நாட்களே பம்பை, நிலக்கல், சபரிமலையில் போர்க்களம் போல் காட்சியளித்தது. கோயிலுக்கு செல்ல முயன்ற பெண்கள் இறுதி வரை அனுமதிக்கப்படவில்லை.
இந்தநிலையில் ஐயப்பன் கோயிலுக்குள் செல்ல முயன்ற பெண்களை தடுத்து பம்பை, சபரிமலை, நிலக்கலில் போராட்டம் நடத்தியது தொடர்பாக கேரள போலீஸார் வழக்குப்பதிவு செய்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், சித்திரை ஆட்டத் திருநாள் பூஜைக்காக திங்கள்கிழமை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலவங்கல், நிலக்கல், பம்பை, மற்றும் சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டக்குழு தரப்பில் மீடியாக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் அனைத்து தரப்பு பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும் சபரிமலை கர்மா சமிதி அனைத்து மீடியா ஆசிரியர்களுக்கும் எழுதியுள்ள வெளிப்படையான கடிதத்தில், பெண் செய்தியாளர்களை அனுப்புவது என்பது நிலையை மேலும் மோசமாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“சபரிமலை கோவிலின் மரபுகள், பழக்க வழக்கங்களுக்கு எதிராக 10 முதல் 50 வயது வரை உள்ள இளம் பெண்களை வலுக்கட்டாயமாக கொண்டு வருவதில் மாநில அரசு பிடிவாதமான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. இந்த வயதினரைச் சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர்கள் கூட தங்கள் வேலையின் ஒருபகுதியாக அங்கு நுழைவது கூட சூழ்நிலையை மோசமாக்க வாய்ப்புள்ளது. எனவே, கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகள் மற்றும் அபிலாஷைகளுக்கு ஒரு அனுதாபமான அணுகுமுறையை எடுத்துக் கொள்ளுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். மேற்கூறிய வயதினரை சேர்ந்த பெண்கள் பத்திரிகையாளர்களை சபரிமலைக்கு அனுப்புவதை தவிருங்கள்,” என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
dinasuvadu.com