வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா இந்திய அணி…? இன்று கடைசி ஒருநாள் போட்டி…!!

Default Image

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது. இந்திய அணி தொடரை கைப்பற்றுமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கவுகாத்தி (8 விக்கெட் வித்தியாசம்) மற்றும் மும்பையில் (224 ரன்கள் வித்தியாசம்) நடந்த ஆட்டங்களில் இந்தியாவும், புனேயில் (43 ரன் வித்தியாசம்) நடந்த ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீசும் வெற்றி பெற்றன. விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஒரு நாள் போட்டி சமனில் முடிந்தது. தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) பகல்-இரவு மோதலாக நடக்கிறது.

முந்தைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை வெறும் 153 ரன்களில் சுருட்டி இமாலய வெற்றி பெற்ற இந்திய அணி, அதே உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்திலும் புரட்டி எடுக்க முனைப்பு காட்டி வருகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தொடர்ந்து 8-வது முறையாக ஒரு நாள் தொடரை கைப்பற்றும். ‘ஹாட்ரிக்’ சதம் அடித்த கேப்டன் விராட் கோலி, இரண்டு சதங்கள் நொறுக்கிய ரோகித் சர்மா மற்றும் கடந்த ஆட்டத்தில் 100 ரன்கள் விளாசிய அம்பத்தி ராயுடு ஆகியோர் சூப்பர் பார்மில் உள்ளனர். ஷிகர் தவான் நல்ல தொடக்கம் கண்டாலும், அதை பெரிய ஸ்கோராக மாற்றுவதில் தடுமாறுகிறார். விக்கெட் கீப்பிங்கில் கலக்கும் டோனி பேட்டிங்கில் (20, 7, 23 ரன்) தகிடுதத்தம் போடுகிறார்.

பந்து வீச்சை பொறுத்தவரை இந்திய அணி மும்பை போட்டியில் பிரமாதப்படுத்தியது. இதில் 3 விக்கெட் வீழ்த்தியதோடு ஸ்விங் தாக்குதலில் அச்சுறுத்திய வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது மீது மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘தற்போதைய அணியில் 4 சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். வெளியிலும் நல்ல பந்து வீச்சாளர்கள் உள்ளனர். புதிய வரவான கலீல் அகமதுவின் பந்து வீச்சை பார்க்கும் போது, அவருக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. அவர் ஒரு பரவசமூட்டும் பவுலர்’ என்றார்.

சரிவில் இருந்து மீள்வதில் கவனம் செலுத்தி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி, கோப்பையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். அந்த அணியில் ஹெட்மயர் (16 சிக்சருடன் 250 ரன்) ஷாய் ஹோப் (250 ரன்) கேப்டன் ஜாசன் ஹோல்டர் (136 ரன்) ஆகியோரை தவிர மற்றவர்களின் பேட்டிங் குறிப்பிடும்படி இல்லை. இதனால் அந்த அணியில் சில மாற்றங்கள் இருக்கலாம்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் நிக் போத்தாஸ் கூறுகையில், ‘இந்தியா சிறந்த அணியாக விளங்குகிறது. அவர்களுக்கு எதிராக நாங்கள் விளையாட மட்டும் செய்யவில்லை, பாடமும் கற்றுக்கொள்கிறோம். இந்தியா போன்ற வலுவான அணிகளை தோற்கடிக்க வேண்டும் என்றால், 100 ஓவர்களுக்கும் நமது திட்டமிடலை சரியாக செயல்படுத்த வேண்டியது முக்கியமாகும்’ என்றார்.

போட்டி நடக்கும் திருவனந்தபுரத்தில் இன்று பிற்பகலில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆட்டம் தாமதமாக தொடங்கவோ அல்லது சில ஓவர்கள் குறைக்கப்படவோ வாய்ப்பு இருக்கிறது. சமீபத்தில் மழை வெள்ளத்தால் கேரளா பெரும் பாதிப்புக்குள்ளானது. இந்த போட்டியின் மூலம் கிடைக்கும் லாபத்தை கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்திருப்பதாக கேரள கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

55 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட இந்த மைதானத்தில் சர்வதேச ஒரு நாள் போட்டி நடக்க இருப்பது இதுவே முதல் முறையாகும். ஏற்கனவே கடந்த ஆண்டு 20 ஓவர் போட்டி ஒன்று இங்கு நடந்தது. மழையால் 8 ஓவர்களாக நடத்தப்பட்ட அந்த ஆட்டத்தில் இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது நினைவு கூரத்தக்கது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, டோனி, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார், கலீல் அகமது, பும்ரா.

வெஸ்ட் இண்டீஸ்: ஹேம்ராஜ் அல்லது சுனில் அம்ப்ரிஸ், கீரன் பவெல், ஷாய் ஹோப், ஹெட்மயர், சாமுவேல்ஸ், ரோவ்மன் பவெல், ஹோல்டர் (கேப்டன்), ஆஷ்லே நர்ஸ், கீமோ பால், தேவேந்திர பிஷூ அல்லது பாபியான் ஆலென், கெமார் ரோச்.

பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 தமிழ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil news live
rain update news today
UdhayanidhiStalin
Chennai Super Kings IPL Auction
India won the Test Match
Heavy Rain - cyclone
meena (10) (1)