விமான விபத்து எப்படி ஏற்பட்டது…கிடைத்தது கருப்பு பெட்டியில் இருந்து சிக்னல்..!!
கடலில் விழுந்து விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமான நிறுவனமான லயன் ஏர் நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குனர் உள்பட தொழில் நுட்ப வல்லுனர்கள் நீக்கம்.
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங்கு தீவிற்கு போயிங் 737 மேக்ஸ் 8 ரக பயணிகள் விமானம் ஒன்று நேற்றுமுந்தினம் புறப்பட்டது. லயன் ஏர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான அந்த விமானத்தில், 178 பயணிகள், ஒரு குழந்தை, 2 பச்சிளங் குழந்தைகள், 2 விமானிகள் மற்றும் 6 பணியாளர்கள் என 189 பேர் இருந்தனர்
இந்தோனேசிய நிதித்துறை அமைச்சகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 20 பேரும் விமானத்தில் பயணித்தனர். டெல்லியைச் சேர்ந்த பவ்யே சுனேஜா விமானத்தின் தலைமை விமானியாக செயல்பட்டுள்ளார். 12-வது நிமிடத்தில் விமானத்தின் வேகம் திடீரென குறைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து விமானத்தை உடனே ஜகார்த்தாவுக்கு திருப்பும்படி விமானிக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிகிறது. இந்த நிலையில், திடீரென 13-ஆவது நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை விமானம் இழந்தது.
அந்த விமானம் சுமத்ரா பகுதியில், கடலில் விழுந்து நொறுங்கியது பின்னர் தெரியவந்தது. விமானத்தின் உடைந்த பாகங்கள் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், மீட்புப் படை அப்பகுதிக்கு விரைந்தது. ஜகார்த்தா, பாண்டுங், லம்பங் ஆகிய பகுதிகளில் இருந்து படகுகள், ஹெலிகொப்டர்கள், கடற்படை கப்பல்கள் தேடும் பணிக்கு அனுப்பப்பட்டன. மீட்புக் குழுவினர் பயணிகள் சிலரது உடல்கள், ஆவணங்களை மீட்டுள்ளனர். விமானத்தின் கருப்புப் பெட்டியைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. 115 அடி ஆழத்தில் விமானத்தின் முக்கிய பாகங்கள் கிடைக்கக்கூடும் எனகூறப்படுகிறது. ராணுவ வீரர்கள், மீனவர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் மீட்புப் பணிகளில் ஈடுட்டுள்ளனர். 3 சிறப்பு கப்பல்களும் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளன. விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என மீட்புப்படையினர் தெரிவித்துள்ளர். கருப்புப் பெட்டியைக் கண்டுபிடித்த பிறகே விமான விபத்திற்கான முழு விவரங்கள் தெரியவரும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாகக் கூறப்படும் நிலையில் விமானம் சில மாதங்களுக்கு முன்புதான் பராமரிப்புப் பணிக்கு அனுப்பப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், லயன் ஏர் நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குநரை நீக்கி இந்தோனேஷிய போக்குவரத்துத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதோடு பல்வேறு தொழில் நுட்ப வல்லுநர்களும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அது மட்டுமில்லாமல் கருப்பு பெட்டியில் இருந்து சிக்னல் கிடைத்து விட்டதாக சொல்லபடுகிறது.
dinasuvadu.com