ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து…25 பேர் பலி..!!
ஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக விழுந்து விபத்து நேரிட்டதில் 25 பேர் உயிரிழந்தனர்.
ப்ராக் மாகாணத்திலிருந்து ஹீராட் மாகாணம் நோக்கி சென்ற ராணுவ ஹெலிகாப்டர் அனார் தாராவில் உள்ள மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள் சிக்கியது. மோசமான வானிலை நிலவிய போது இந்த விபத்து நேரிட்டுள்ளது. விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த கமாண்டர்கள், வீரர்கள் மற்றும் இரு பெண்கள் என மொத்தம் 25 பேரும் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதமும் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்தில் சிக்கியது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். விபத்துக்களுக்கு தொழில்நுட்ப கோளாறு காரணம் என்று கூறும் விசாரணை அதிகாரிகள் அதுதொடர்பாக விளக்கமளிக்க மறுத்து வருகிறார்கள்.
இதற்கிடையே ராணுவ ஹெலிகாப்டரை நாங்கள்தான் சுட்டு வீழ்த்தினோம் என தலிபான் பயங்கரவாதிகள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே காபூல் நகரில் அந்நாட்டின் மிகப்பெரிய சிறைச்சாலைக்கு வெளிப்புறம் பயங்கரவாதிகள் வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளனர். இதில் 7 பேர் பலியாகினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சிறையில்தான் நூற்றுக்கணக்கான தலிபான் பயங்கரவாதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகள் சிறைக்கு பணிக்கு சென்றவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர், அவர்கள் தலிபான் இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
dinasuvadu.com