சிபிஐ இடைக்கால இயக்குநருக்கு வந்த சோதனை…மனைவிக்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டு…!!
மனைவிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகஸ்வரராவ் மறுப்பு தெரிவித்து உள்ளார்.
சிபிஐ இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்ட நாகஸ்வரராவின் மனைவி, தனியார் நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்ததில் பல்வேறு முறைகேடுகள் உள்ளதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இந்த நிலையில், தன் மனைவி மீது எழுந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகஸ்வரராவ் கூறியிருப்பதாவது :
ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில், நிலம் ஒன்று வாங்குவதற்காக, எங்களது குடும்பத்தின் நீண்டகால நண்பரான பிரவீண் அகர்வாலுக்குச் சொந்தமான ஏஞ்சலா மெர்க்கண்டைல் நிறுவனத்திலிருந்து, ரூ.25 லட்சத்தை எனது மனைவி மன்னேம் சந்தியா கடந்த 2010-ஆம் ஆண்டு கடனாகப் பெற்றார். அந்தத் தொகையைப் பயன்படுத்தி, அதே ஆண்டு அந்த நிலம் வாங்கப்பட்டது. பின்னர், 2011-ஆம் ஆண்டு அந்த நிலம் விற்கப்பட்டது. அதன் மூலம் ரூ.58.62 லட்சம் கிடைத்தது. பின்னர், எங்கள் சேமிப்பிலிருந்து சிறிதளவு தொகையைச் சேர்த்து, ரூ.60 லட்சம் அந்த நிறுவனத்துக்குத் திருப்பி கொடுக்கப்பட்டது.
கடன்தொகை ரூ.25 லட்சத்தைப் பிடித்துக்கொண்டு, மீதி ரூ.35 லட்சம் அதே நிறுவனத்தில் எனது மனைவியின் சார்பில் முதலீடு செய்யப்பட்டது. அந்த முதலீட்டின் மூலம், கடந்த 2014-ஆம் ஆண்டு, வட்டியையும் சேர்த்து ரூ.41.33 லட்சத்தை அந்த நிறுவனம் எனது மனைவியிடம் திருப்பி அளித்தது. இந்தப் பணப் பரிமாற்றங்கள் அனைத்துக்கும், வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
dinasuvadu.com