தீபாவளி அதிர்ச்சி…ஆம்னி பஸ்களின் கட்டணம் இருமடங்கு உயர்வு…!!
தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களின் கட்டணம் இருமடங்கு உயர்ந்து இருப்பதாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் வேதனை தெரிவித்தனர்.
தீபாவளி பண்டிகை வருகிற 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. செவ்வாய்க்கிழமையில் தீபாவளி பண்டிகை வருவதால் தொடர் விடுமுறை இருக்காது என்று பலரும் நினைத்து இருந்த நிலையில், வருகிற 5-ந்தேதி (திங்கட்கிழமை) பொது விடுமுறை என்று அரசு அறிவித்தது.
இந்த அறிவிப்பினால் தொடர் விடுமுறை சாத்தியம் ஆகி இருக்கிறது. இதனால் வருகிற 2-ந்தேதி(வெள்ளிக்கிழமை) இரவு முதலே சொந்த ஊருக்கு சென்று தீபாவளியை கொண்டாடுவதற்காக பொதுமக்கள் பலரும் திட்டமிட்டு உள்ளனர்.
ஏற்கனவே அனைத்து ரெயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்ட நிலையில், பஸ்களில் பயணம் செய்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு பஸ்களை அரசு அறிவித்திருந்தாலும், தனியார் ஆம்னி பஸ்களில் பயணிக்கவே பெரும்பாலானோர் விருப்பம் தெரிவிக்கின்றனர்.
இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, ஆம்னி பஸ்களின் கட்டணத்தை அதன் உரிமையாளர்கள் இருமடங்கு உயர்த்தி இருக்கின்றனர். அதன்படி சாதாரண நாட்களில் இருக்கும் கட்டணத்தை விட இருமடங்காக கட்டணம் உயர்ந்து இருக்கிறது. இந்த கட்டண உயர்வால் ஆம்னி பஸ்களுக்கான பிரத்தியேக இணையதளத்தில் முன்பதிவு செய்ய செல்லும் பயணிகள் அதிர்ச்சி அடைகிறார்கள். அந்த அளவுக்கு கட்டணம் உயர்ந்து உள்ளது.
அதாவது, சென்னையில் இருந்து மதுரைக்கு மற்ற நாட்களில் இருக்கை மற்றும் படுக்கை வசதியுடன் சாதாரண, ஏ.சி. வசதி கொண்ட பஸ்களில் ரூ.600 முதல் ரூ.1200 வரையில் டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வந்தன. தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.1,200 என்ற நிலையிலே கட்டணங்கள் தொடங்குகிறது. இது டிக்கெட் தட்டுப்பாட்டை பொறுத்து மேலும் உயர்த்தி வருகின்றனர்.
சென்னை-நெல்லை ஆம்னி பஸ்களில் சாதாரண நாட்களில் ரூ.700 முதல் ரூ.1,400 வரை கட்டணங்கள் இருந்த நிலை மாறி, தீபாவளிக்கு 3 நாட்களுக்கு முன்பு பயணிக்கும் பஸ்களில் ரூ.1,400 என்ற ஆரம்ப கட்டணத்தில் தான் டிக்கெட் இருக்கிறது. டிக்கெட் தட்டுப்பாட்டை பொறுத்து, இந்த கட்டணங்கள் ரூ.2 ஆயிரத்துக்கு மேல் செல்வதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது.
அதேபோல், தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செல்லும் ஆம்னி பஸ்களின் கட்டணம் உயர்ந்து உள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்தவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வேதனை தெரிவித்து இருக்கின்றனர்.குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் மிகுந்த வேதனை அடைந்து உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் உள்பட தொடர் விடுமுறை நாட்களில் ஆம்னி பஸ்களின் கட்டணங்கள் உயர்த்தப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதற்கு தீர்வு தான் என்ன? அரசின் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக இருக்கிறது.
dinasuvadu.com