ரூ 1,80,000,00,00,000 கடன் ரத்து…39,00,00,000 பேர் பென்ஷன் ரத்து…இவை யாருடைய பணம்….!!ஏ.ஐ.ஐ.இ.ஏ தலைவர் அமானுல்லாகான் கேள்வி…
பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் முதலீட்டு முடிவுகளில் அரசு தலையீடு அதிகரித்துள்ளது என்றும் ரூ 1,80,000 கோடி கடன் ரத்து செய்து 39 லட்சம் பேர் பென்ஷனையும் அரசு ரத்து செய்துள்ளதுஎன்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் (ஏஐஐஇஏ) தலைவர் அமானுல்லாகான் கூறினார்.
சென்னை காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் சென்னை பகுதி-1ன் மாநாட்டை தொடங்கி வைத்து அமானுல்லாகான் பேசியதன் சுருக்கம் வருமாறு :
மத்தியில் உள்ள ஆட்சியாளர்களால், பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றன. பன்முக கலாச்சாரம் தகர்க்கப்படுகிறது. கல்விக்குள் அறிவியலுக்கு புறம்பான திணிப்புகள் அரங்கேற்றப்படுகிறது. இந்திய அரசியல் கட்டமைப்பின் முக்கியமான நிறுவனங்கள் திட்டமிட்டு சிதைக்கப்படுகின்றன. சபரிமலையில் நடக்கும் கும்பல் வன்முறை அரசியல் சாசனத்தை கேள்விக்குள்ளாக்குகிறது.
அவசரநிலை காலத்தில் அரசியல் எதிரிகளின் இல்லக்கதவுகள் நள்ளிரவில் தட்டப்பட்டன. இப்போது சிபிஐ தலைவரின் இல்லக்கதவே தட்டப்படுகிறது. சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா “அரசு என் மீது மகிழ்ச்சியாக இல்லை. சில விசாரணைகள் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக உள்ளது” என்கிறார். ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ஆச்சாரியா, “ரிசர்வ் வங்கி தனது நிர்வாக சுதந்திரத்தை இழந்து வருகிறது” என்கிறார். இதேபோன்றுதான் எல்ஐசி – யின் முதலீட்டு முடிவுகளில் அரசு தலையிடுகிறது. இவையெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடைய நிகழ்வுகள். எல்ஐசி-யின் வளர்ச்சி தடைபட்டு, அக்டோபரில் வளர்ச்சி எதிர்மறை விகிதத்தில் உள்ளது. ஒற்றை பிரிமிய திட்டங்களே அதிகமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. காலமுறை பிரிமியம் வருவதில்லை. வசதி படைத்தவர்கள்தான் ஒற்றை பிரிமியத்தை செலுத்த முடியும்.
நாட்டில் உள்ள 92 சதவீத பெண் உழைப்பாளிகளும், 80 சதவீத ஆண் உழைப்பாளிகளும் மாதம் 10ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக சம்பாதிக்கும் போது இவர்களால் எப்படி ஒற்றை பிரிமியத்தை செலுத்த முடியும். மிரியலாகுடாவில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க உறுப்பினர் பாலசாமியின் மகன் 23 வயதான பிரனாய் சாதி மறுப்பு திருமணத்திற்காக கொலை செய்யப்பட்டுள்ளான். தொழிற்சங்க நிகழ்ச்சி நிரலில் சாதிய ஒடுக்குமுறை எதிர்ப்பும் இணைய வேண்டும் என்பதை உணர்த்துகிற சோக நிகழ்வாகும். பணி நியமனங்கள் அரசால் தடுக்கப்படுகின்றன. நிரந்தர வேலைக்கு ஆட்கள் நியமிப்பதை அரசு விரும்பவில்லை. மத்திய அரசு பணிகளில் 40 சதவீதம் நிரந்தரமற்றதாகவும், கர்நாடக அரசில் 45 சதவீத வேலைகள் நிரந்தரமற்றதாகவும் உள்ளன. தமிழகத்திலும் இதேபோன்ற நிலை உள்ளது. ஐ.எம்.எப் வழிகாட்டல் படி, ஐஏஎஸ் அந்தஸ்திலுள்ள மத்திய அரசு துணைச் செயலாளர்கள் பதவிக்கே “வரையறுக்கப்பட்ட மூன்றாண்டு பணிக் காலத்திற்கு” (பிக்சட் டேர்ம் எம்பிளாயிமெண்ட்) நியமிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசில் 19 லட்சம், மாநில அரசின் 39 லட்சம் ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக் கோருகிறார்கள். ரிசர்வ் வங்கி, பொது இன்சூரன்ஸ் ஊழியர்களும் பென்ஷன் குறித்த கோரிக்கைகளை வைத்துள்ளனர். ஜனவரி 8, 9 வேலை நிறுத்தம் இக் கோரிக்கையை முன்னிறுத்துகிறது. குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.18000ஆக உயர்த்தக் கோருகிறோம். ஆகவே இயல்பாக குறைந்தபட்ச பென்ஷன் 50 சதவீதம் எனில் ரூ. 9000 என்றிருக்க வேண்டும்.
விவசாயக் கடன் ரத்து செய்யப்பட வேண்டும். 2014-17 க்கும் இடையில் 1,80,000 கோடி கார்ப்பரேட் கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் சிறு பகுதியை செலவழித்தால் விவசாயக் கடன்களை ரத்து செய்து விடலாம். ஆனால் முதலாளிகளுக்கு கடன் ரத்தும் கிடைக்கும். ரபேல் டீலும் கிடைக்கும். 11 லட்சம் வராக்கடன். யாருடைய பணம்? யாருடைய சேமிப்பு? யாரிடம் இருந்து பெறப்படும் வருவாய்? சுரங்கம், ஆறு, மலை, இயற்கை வளங்கள்… சாதாரண மக்களுக்கு அல்ல என்கிறது அரசு. இதற்கும் பொதுத்துறை மீதான தாக்குதலுக்கும் சம்பந்தம் இல்லையா? 5 விழுக்காடு கார்ப்பரேட்டுகளின் நலனுக்கான இலக்குகள்தானே இவை எல்லாம். விவசாயிகள், தொழிலாளர்கள் இணைந்து போராடும் போது அவர்களை பிரிக்கிற நிகழ்ச்சி நிரல்கள் முன்னுக்கு வருகின்றன. நாம் இவற்றை எதிர்கொள்ள வேண்டும். ஒற்றுமைக்காக நமது குரல் எழ வேண்டும். மதச் சார்பின்மை, ஜனநாயகம், பொதுத் துறை, பொருளாதாரக் கோரிக்கைகள் பாதுகாக்கப்பட ஒற்றுமை மிக மிக அவசியம்.இவ்வாறு அவர் பேசினார்.
dinasuvadu.com