அசத்தல் பந்து வீச்சு 6 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்திய நேதன் லயன்…!!
ஆட்ட முடிவில் மொகமது அப்பாஸின் அற்புதமான பந்து வீச்சுக்கு கடந்த டெஸ்ட் ‘ட்ரா’ நாயகன் உஸ்மான் கவாஜா, இரவுக்காவலன் பீட்டர் சிடில் ஆகியோர் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 20 ரன்கள் எடுத்துள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி உஸ்மான் கவாஜாவின் மாஸ்டர் கிளாஸ் இன்னிங்சினால் எதிர்பாராதவிதமாக ட்ரா ஆனதையடுத்து அபுதாபியில் இன்று டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகம்து முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆஸ்திரேலியா கடந்த டெஸ்ட் ட்ராவை முன் வைத்து இந்த டெஸ்ட் போட்டியில் ஆக்ரோஷமாக பந்து வீசியது, முனைப்புடன் ஆடியது.நேதன் லயன் அதியற்புதமாக வீசி ஒரு அபாயகரமான ஸ்பின் பந்து வீச்சுத் திறமையைக் காட்டி 6 பந்துகளில் 4 விக்கெட்டுகளைக் கழற்ற பாகிஸ்தான் 57/5 என்றும் பிறகு உணவு இடைவேளையின் போது 77/5 என்றும் தட்டுத் தடுமாறியது.ஆனால் அறிமுக தொடக்க வீரர் ஃபகார் ஜமான் (94), விக்கெட் கீப்பர்/கேப்டன் சர்பராஸ் அகமட் (94) இணைந்து ஸ்கோரை 204 ரன்களுக்குக் கொண்டு சென்றனர்.
அசார் அலி (15), ஹாரிஸ் சொஹைல் (0) ஆகியோரை நேதன் லயன் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி பாகிஸ்தான் முகாமில் பதற்றத்தை அதிகப்படுத்தினார். ஆசாத் ஷபீக், நேதன் லயன் ஹாட்ரிக் பந்தை தடுத்தாடினாலும் அவரும் டிஆர்எஸ். ரிவியூவில் டக் அவுட் ஆகி வெளியேறினார். மிக முக்கியமான நேதன் லயன் விக்கெட் அடுத்ததாக வந்தது, பாபர் ஆஸம் (0), ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே லயன் நன்றாகத் தூக்கி வீசி ஸ்பின் செய்தார், பாபர் ஆஸம் இன்சைடு அவுட் ட்ரைவ் ஆட முயன்றார் ஆனால் பந்து இறங்கி திரும்பியதில் ஆஸம் ஷாட் சிக்கவில்லை, ஸ்டம்புக்குள் பாய்ந்தது பந்து. பாகிஸ்தான் 57/5.
அதன் பிறகு பகர் ஜமான், கேப்டன் சர்பராஸ் இணைந்து 147 ரன்கள் சேர்த்தனர், சர்பராஸ் அகமட் மிகத்திறமையுடன் ஸ்பின் பந்து வீச்சைக் கையாண்டார். இது வெறும் பார்ட்னர்ஷிப் மட்டுமல்ல, ஆஸ்திரேலியாவின் உத்வேகத்தையும் தங்கள் ஷாட்கள் மூலம் கெடுத்தனர், பகார் ஜமான் 8 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 94 ரன்களில் லெக் ஸ்பின்னர் லபுஷானிடம் எல்.பி.ஆனார். லபுஷான் பிலால் ஆஸிப்பையும் 12 ரன்களில் காலி செய்ய அடுத்ததாக 129 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 94 எடுத்த சர்பராஸ் அகமடும் லபுஷானிடம் கவரில் கேட்ச் ஆகி வெளியேறினார். லபுஷான் 3 அருமையான விக்கெட்டுகளைக் கைப்பற்ற யாசிர் ஷாவை மிட்செல் மார்ஷ் பவுல்டு செய்ய மொகமது அப்பாஸ் ஸ்டார்க்கிடம் பவுல்டு ஆக 81 ஓவர்களில் 282 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்சில் ஆட்ட முடிவில் 20/2 என்று தடுமாறி வருகிறது .
DINASUVADU