வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்…

Default Image

ஐதராபாத்,
இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இந்த நிலையில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.
முதலாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீசை 3-வது நாளுக்குள் சுருட்டி வீசிய இந்திய அணி அதே உத்வேகத்துடன் இந்த டெஸ்டிலும் போட்டுத்தாக்கி தொடரை கைப்பற்றுவதில் தீவிரமாக இருக்கிறது. தொடக்க டெஸ்டில் இளம் வீரர் பிரித்வி ஷா, கேப்டன் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சதம் அடித்தனர். பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா மூன்று பேரும் கலக்கினர். இந்திய அணியை பொறுத்தவரை துணை கேப்டன் ரஹானேவின் பேட்டிங் மட்டுமே சற்று கவலைக்குரிய அம்சமாக இருக்கிறது. அவர் செஞ்சுரி போட்டு 14 மாதங்கள் ஆகிறது. மற்றபடி எல்லா வகையிலும் இந்திய அணி வலுவாக காணப்படுகிறது.
இந்த போட்டிக்கான 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.
போதிய அனுபவம் இல்லாத வெஸ்ட் இண்டீஸ் அணி 5 நாட்கள் வரை தாக்குப்பிடித்தாலே பெரிய விஷயமாக இருக்கும். கணுக்கால் காயத்தால் முதலாவது டெஸ்டில் ஆடாத கேப்டன் ஜாசன் ஹோல்டர் உடல்தகுதியை எட்டி விட்டதாக தெரிகிறது. இதே போல் தனது பாட்டி இறந்ததால் தாயகம் திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் கெமார் ரோச் இந்தியாவுக்கு வந்து விட்டார். இந்த போட்டியில் ரோச் களம் காண இருப்பது வெஸ்ட் இண்டீசின் பந்து வீச்சை பலப்படுத்தும். முந்தைய டெஸ்டில் அடைந்த மோசமான தோல்விக்கு பரிகாரம் தேடுவதற்கு முடிந்தவரை முயற்சிப்பார்கள் என்று நம்பலாம்.
வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டர் ரோஸ்டன் சேஸ் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘முதலாவது டெஸ்டில் செய்த தவறுகளில் இருந்து நிச்சயம் எங்களது வீரர்கள் பாடம் கற்று இருப்பார்கள். தோல்விக்கு பிறகு நாங்கள் நீண்ட நேரம் விவாதித்தோம். இப்போது சில திட்டங்களை வகுத்துள்ளோம். இந்திய தொடக்க வீரர் பிரித்வி ஷாவுக்கு எப்படி பந்து வீசுவது என்பது குறித்தும் ஆலோசித்துள்ளோம். அவரை சீக்கிரமாக வீழ்த்துவதற்கு எந்த மாதிரியான திட்டங்கள் வைத்துள்ளோம் என்பதை இங்கு (நிருபர்களிடம்) சொல்ல முடியாது.
மூத்த வீரர் கெமார் ரோச் அணிக்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது அனுபவம் அணிக்கு உதவிகரமாக இருக்கும். இதே போல கேப்டன் ஹோல்டர் திரும்புவதும் அணிக்கு நல்ல விஷயமாகும்’ என்றார்.
ஐதராபாத் ஸ்டேடியத்தில் இந்திய அணி இதுவரை தோற்றதில்லை. இங்கு நடந்துள்ள 4 டெஸ்டுகளில் இந்திய அணி 3-ல் வெற்றியும், ஒன்றில் டிராவும் கண்டுள்ளது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:- இந்தியா: பிரித்வி ஷா, லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரிஷாப் பான்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், உமேஷ் யாதவ், முகமது ஷமி, குல்தீப் யாதவ் அல்லது ஷர்துல் தாகூர்.
வெஸ்ட் இண்டீஸ்: கிரேக் பிராத்வெய்ட், கீரன் பவெல், ஷாய் ஹோப், சுனில் அம்ப்ரிஸ், ஹெடிம்யேர், ரோஸ்டன் சேஸ், ஷேன் டாவ்ரிச் (விக்கெட் கீப்பர்), ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), கெமார் ரோச், தேவேந்திர பிஷூ அல்லது ஜோமெல் வாரிகன், கேப்ரியல்.
காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணியில் அறிமுக வீரராக அடியெடுத்து வைத்த 18 வயதான பிரித்வி ஷா 134 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். இதனால் 2-வது டெஸ்டிலும் அவர் மீது எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இது குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-
பிரித்வி ஷாவின் பேட்டிங் அணுகுமுறை ஷேவாக் மாதிரி இருக்கிறது, சச்சின் தெண்டுல்கர் போன்று உள்ளது என்று கூறி தயவு செய்து யாருடனும் ஒப்பிட்டு பேசாதீர். அவருக்கு நெருக்கடி ஏதும் கொடுக்காமல், கிரிக்கெட்டை உற்சாகமாக அனுபவித்து விளையாட விட்டு விடுங்கள். அவரிடம் நிறைய திறமை இருக்கிறது. முதலாவது டெஸ்ட் போன்று 2-வது டெஸ்டிலும் அவரால் சாதிக்க முடியும்.
இளம் வீரரான அவர் வளர்வதற்கு போதுமான அவகாசம் கொடுக்க வேண்டியது அவசியமாகும். கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டும் பிரித்வி ஷா, சூழ்நிலையை துல்லியமாக புரிந்து கொள்கிறார். அவரை நினைத்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இவ்வாறு கோலி கூறினார்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்