சபரிமலை விவகாரம் : மூன்று மறு சீராய்வு மனுக்கள் தாக்கல்..
சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரம் மறு சீராய்வு மனு தாக்கல் : கேரள மாநிலத்தின் மிகவும் பிரபலமான சபரி மலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு செய்யலாம் என்று கடந்த மாதம் 28ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை முழு மனதோடு ஆதரிப்பதாகவும், கோவிலுக்கு வரும் பெண்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார்.நீதிமன்ற தீர்ப்பிற்கு மக்களின் எதிர்ப்பு
இந்நிலையில் பந்தளம் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒன்று கூடி மக்களுடன் வீதியில் இறங்கி, உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக ஊர்வலம் நடத்தினார்கள். அம்மாநிலத்தின் பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் பந்தளம் ராஜ குடும்பத்தினர் மற்றும் திருவிதாங்கூர் தேவசம் உறுப்பினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. அதற்காக எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா அழைப்பு விடுத்திருந்தார்.
சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரம் மறு சீராய்வு மனு
மாநில அரசு சார்பில் மறு சீராய்வு மனுக்கள் தரமாட்டோம் என்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை நிறைவேற்றுவோம் என்றும் பினராயி விஜயன் கூறிய நிலையில், திங்களன்று (08/10/2018) மூன்று மறுபரிசீலனை மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்கள்.
நாயர் சர்வீஸ் சொசைட்டி சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த மனுவினை மூத்த வழக்கறிஞர் கே.பரசாரன் சார்பில், வழக்கறிஞர் கே.வி. மோகன் தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில் “பெண்களிலே பெரும்பாலானோர் இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பினை எதிர்க்கிறார்கள். மேலும் அவர்கள் 10 வயதிலிருந்து 50 வயது வரை உள்ள பெண்களை அனுமதிக்காத பழக்கத்தினையே பின்பற்ற வேண்டும்” என்று கூறப்பட்டிருக்கிறது.
இரண்டாவது மறு சீராய்வு மனுவினை சேட்னா கான்சயின்ஸ் ஆஃப் வுமன் என்ற அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் கே.வி. முத்து குமார் தாக்கல் செய்திருக்கிறார். அதில் ”மக்களின் பழக்க வழக்கங்களில் தொடர்ந்து நீதி அமைப்புகள் விளையாடும் பட்சத்தில் தேவையில்லாத பிரச்சனைகளுக்கு வழிவிடும் என்று கூறப்பட்டிருக்கிறது.
மூன்றாவது மறுசீராய்வு மனுவினை தேசிய ஐயப்ப பக்தர்கள் அசோசியேசன் தலைவர் ஷைலஜா விஜயன் சார்பில், வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பரா தாக்கல் செய்திருக்கிறார். அதில் “பெண்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால் பெண்கள் யாரும் அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பதாக கூறவில்லை.” அதனால் கோவிலில் பெண்கள் அனுமதி இல்லை என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானதாக கருதக் கூடாது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
DINASUVADU