கும்பகோணம் அரசு கலை கல்லூரி மாணவ-மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்திய போது எடுத்த படம்
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள அரசு கலை கல்லூரியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு கல்லூரி மாணவர்கள் தங்கிய விடுதியில் இரவு சாப்பாடு வழங்கப்பட்டது. அப்போது சாப்பாட்டில் பல்லி கிடந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் திடீரென அசூர் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதியில் தரமான, சுகாதாரமான உணவு வழங்க கோரி கோஷமிட்டனர்.
இதையடுத்து கும்பகோணம் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பிறகு மறியலில் போராட்டத்தில் ஈடுபட்ட 5 மாணவர்களை மட்டும் போலீசார் அழைத்து சென்றனர். பிறகு சிறிது நேரத்தில் 5 மாணவர்களையும் விடுவித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை கும்பகோணம் அரசு கலை கல்லூரி மாணவ- மாணவிகள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி வளாகத்தில் சுமார் 2 ஆயிரம் மாணவ- மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பிறகு கல்லூரி முன்பு ரோட்டில் மாணவர்கள் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்கள் போலீசாரை விசாரணைக்கு அழைத்து சென்றதை கண்டித்தும், விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதை கண்டித்தும் மாணவ- மாணவிகள் கோஷமிட்டனர்.
இதையடுத்து கும்பகோணம் போலீசார் விரைந்து வந்து போராட்டம் நடத்திய மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.