ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸாக வழங்கப்படும்  என மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2022-23ம் ஆண்டில் ரயில்வே செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதால் 78 நாள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ரூ.1,968.87 கோடி நிதி ஒதுக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். தீபாவளி போனஸ் வழங்கப்படுவதன் மூலம் 11 லட்சத்து 7 ஆயிரத்து 346 ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள். லோகோ பைலட்டுகள், ஸ்டேஷன் மாஸ்டர்  தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்டோர் போன்ஸால் பயன்பெறுவர். 2022-23ம் ஆண்டில் 650 கோடி பயணிகள் ரயில்களில் பயணம் செய்துள்ளனர். 151 கோடி டன் சரக்குகளை ரயில்வே கையாண்டுள்ளது என கூறியுள்ளார். 

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இதனிடையே, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை (DA) 4 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயரும். 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்றும் கடந்த ஜூலை 1-ஆம் தேதியை கணக்கிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதுபோன்று, மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. குரூப் சி மற்றும் குரூப் பி (Non-Gazetted) அதிகாரிகளுக்கு போனஸ் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.7000 வரை தீபாவளி போனஸ் வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்