3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சமி வேகத்தால் 63 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி…!!

3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சமி வேகத்தால் 63 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி…!!

Default Image

ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி.
இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், ஜோகன்னஸ்பர்க்கில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது.
முதல் இன்னிங்க்ஸில் இந்தியா 187 ரன்களும், தென்னாப்பிரிக்கா 194 ரன்களும் எடுத்தது. 2வது இன்னிங்ஸில் இந்திய அணி, 247 ரன்கள் எடுத்தது. முரளி விஜய் 25 ரன்களும், கேப்டன் கோலி 41, ரஹானே 48, புவனேஷ்குமார் 33, ஷமி 27 ரன்கள் எடுத்தனர்.
எனவே தென்னாப்பிரிக்காவுக்கு 241 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி. தென்னாப்பிரிக்கா 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்திருந்தது. இந்தநிலையில், நான்காம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய அந்த அணிக்கு டீன் எல்கர் – ஹஷிம் அம்லா ஜோடி சிறப்பான ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. இந்திய பந்துவீச்சைத் திறம்பட சமாளித்த இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்தது. அம்லா, 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அம்லா வெளியேறியவுடன் தென்னாப்பிரிக்க அணியானது சரிவை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது. ஒரு முனையில் டீன் எல்கர் நிலைத்து நின்று ஆடினாலும், அவருக்கு சரியான ஒத்துழைப்பை எந்த தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேனும் கொடுக்கவில்லை. தென்னாபிரிக்கா அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிவிலியர்ஸ் 6 ரன்களிலும், கேப்டன் டுபிளசி 2 ரன்களிலும், விக்கெட் கீப்பர் டி காக் ரன் கணக்கைத் தொடங்காமலும் ஆட்டமிழந்தனர். அவர்களை அடுத்து பேட்டிங் பிடிக்க வந்த பிலாண்டர் 10 ரன்களிலும், பெலுக்வாயோ, ரபாடா மற்றும் மோர்னே மோர்கல் ஆகியோர் ரன் கணக்கைத் தொடங்காமலும் அடுத்தடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்தனர். ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 73.3 ஓவர்களில் 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரை 1-2 என்ற கணக்கில் முடித்துக்கொண்டது. இந்திய அணி தரப்பில் பந்துவீச்சாளர்கள் முகமது ஷமி 5 விக்கெட்டுகளும், பும்ரா, இஷாந்த் ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். தென்னாப்பிரிக்க அணி தரப்பில் அதிகப்பட்சமாக டீன் எல்கர் 84 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார். ஹசீம் அம்லா 52 ரன்கள் எடுத்தார். முதல் இரண்டு போட்டிகளிலும் வென்று ஏற்கெனவே தென்னாப்பிரிக்கா தொடரை வென்றிருந்தது.

Join our channel google news Youtube