யு-17 உலக கால்பந்து போட்டியில் அமெரிக்காவுடன் இன்று மோதுகிறது இந்தியா.

யு-17 என்னும் 17 வயதுக்கு உள்பட்டோருக்கான ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி புதுடெல்லி, நவி மும்பை நகரங்களில் இன்றுத் தொடங்குகிறது.
இதில் டெல்லியில் நடைபெறும் ‘ஏ’ பிரிவு முதல் ஆட்டத்தில் கொலம்பியா – கானா அணிகள் மோதுகின்றன.
இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா – அமெரிக்கா அணிகள் களம் காண்கின்றன.
‘பி’ பிரிவு முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்து – துருக்கி அணிகள் நவி மும்பையிலும், 2-வது ஆட்டத்தில் பராகுவே – மாலி அணிகளும் எதிர்கொள்கின்றன. இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டி வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி வரை இந்தியாவின் 6 நகரங்களில் நடைபெறுகிறது.
இதர நாட்டு அணிகள் தகுதிச்சுற்று மூலம் இப்போட்டிக்கு தகுதிபெற்ற நிலையில், உலகக் கோப்பை போட்டியை நடத்தும் நாடு என்ற முறையில் இந்திய அணி நேரடியாக தகுதிபெற்றுள்ளது.
இந்தியா, தனது முதல் ஆட்டத்திலேயே பலம் வாய்ந்த அமெரிக்க அணியை எதிர்கொள்கிறது.

இந்திய அணியைப் பொருத்தவரையில், கடந்த 2015-ஆம் ஆண்டு இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ஜெர்மனியின் நிகோலாய் ஆடம், நாடு முழுவதுமாக தேர்வு செய்து ஓர் அணியை கட்டமைத்திருந்தார்.
எனினும், கடந்த மார்ச் மாதம் அவரது பதவிக் காலம் முடிவுக்கு வர, போர்ச்சுகீசிய நாட்டைச் சேர்ந்த லூயிஸ் நார்டன் டி மாடோஸ் பயிற்சியாளராக பொறுப்பேற்றார்.
நிகோலாய் கட்டமைத்திருந்த அணியில், ஒரு சில மாற்றங்களை மேற்கொண்டு உலகக் கோப்பைக்கான அணியை உருவாக்கினார் லூயிஸ். அமர்ஜித் சிங் தலைமையிலான இந்த அணி 7 மாதங்களில் உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகியுள்ளது.
அமெரிக்க அணியைப் பொருத்தவரையில், லீக் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட பலம்வாய்ந்த அணியாக இருக்கிறது. அந்த அணியின் இரு வீரர்கள், ஐரோப்பிய கால்பந்து கிளப்புகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment