108 அவசர ஊர்திகள்.. நேரம் குறைவு – அன்புமணி ராமதாஸ் பாராட்டு!

கிராமப்பகுதிகளில் அவசர ஊர்தி வந்து சேரும் சராசரி நேரத்தை 10 நிமிடமாக குறைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னையில் 108 அவசர ஊர்திகள், அழைக்கப்பட்ட நேரத்திலிருந்து நோயாளிகளை சென்றடையும் சராசரி நேரம் 7 நிமிடமாக குறைந்துள்ளது. அதாவது, ஒருவர் சேவை கோரி அழைத்தவுடன் புறப்படும் அவசர ஊர்தி சராசரியாக அடுத்த 7 நிமிடங்களில் நோயாளியை சென்றடைகிறது. இது பாராட்டத்தக்கது.

நோயாளிகள், விபத்துகளில் சிக்கியவர்களின் உயிரைக்காக்க உடனடி மருத்துவ சிகிச்சை அவசியம். அதற்காகத்தான் எனது பதவிக்காலத்தில் 108 சேவையை தொடங்கினேன். சென்னையில் அவசர ஊர்தி வந்து சேரும் நேரம் 8.40 நிமிடத்திலிருந்து 7நிமிடமாக குறைக்கப்பட்டிருப்பதால் பல உயிர்கள் காப்பாற்றப்படும். இதுபோன்று, நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் 108 அவசர ஊர்திகளின் சேவையை விரைவுபடுத்த வேண்டியது அவசியம் ஆகும்.

கிராமங்களில் அவசர ஊர்தி வந்து சேரும் நேரம் சில இடங்களில் 10 நிமிடம் முதல் 30 நிமிடங்களாக (சராசரி 15 நிமிடங்கள்) உள்ளது. இது மேலும் குறைக்கப்பட வேண்டும். கிராமப்பகுதிகளில் அவசர ஊர்தி வந்து சேரும் சராசரி நேரத்தை 10 நிமிடமாக குறைக்க வேண்டும். அதற்காக அவசர ஊர்திகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அவசர ஊர்திகள் நிறுத்தி வைக்கப்படும் இடங்களின் எண்ணிக்கையையும் உயர்த்துவதற்கு அரசு முன்வர வேண்டும் என கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment