பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்.. கைதான இருவருக்கும் 10 நாட்கள் காவல்!

Rameshwaram Cafe: ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் நேற்று கைதான இருவருக்கு 10 நாட்கள் என்ஐஏ காவல்.

பெங்களுருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் மார்ச் 1ம் தேதி குண்டுவெண்டிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் ஓட்டல் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என 10 பேர் காயமடைந்தனர். பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், இதுதொடர்பான வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகாமையிடம் ஒப்படைத்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டு குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். அந்தவகையில் கடந்த மாதம் வெடிகுண்டுகள் பொருட்கள் சப்ளை செய்ததாக கூறப்படும் முஸாமில் ஷெரீஃப் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் இருவரை என்ஐஏ அதிகாரிகள் தேடி வந்தனர். இந்த சூழலில், மேற்குவங்க மாநிலத்தில் தலைமறைவாக இருந்த முசாவீர் ஹுசைன் ஷாஸேப் மற்றும் அத்புல் மதீன் தாஹா ஆகிய இரண்டு பேரை என்ஐஏ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

மேற்கு வங்கத்தில் உள்ள புர்பா மெதினிபூர் மாவட்டத்தில் மறைமுகமாக இருந்ததை கண்டுபிடித்து  முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு ரிமாண்டில் இன்று காலை பெங்களூருவிக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த நிலையில், நேற்று கைதான முசாவீர் ஹுசைன் ஷாஸேப் மற்றும் அத்புல் மதீன் தாஹா ஆகிய இருவருக்கும் 10 நாட்கள் என்ஐஏ காவல் வழங்கி பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டது. இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ மனு தாக்கல் செய்த நிலையில், அனுமதி அளிக்கப்பட்டது