ஜனநாயகத்தை காப்பாற்ற இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் – பிரதமர் மோடி

ஜனநாயகத்தை காப்பாற்ற இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று பிரதமர் மோடி தேசிய இளைஞர் நாடாளுமன்ற நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

இன்று சுவாமி விவேகானந்தாவின் 157-வது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் இரண்டாவது தேசிய இளைஞர் நாடாளுமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, காணொலி வாயிலாக பங்கேற்ற பிரதமர் மோடி, காலம் செல்ல செல்ல நாடு சுதந்திரமடைந்து வருவதை இன்றும் நாம் காண்கிறோம். சுவாமி விவேகானந்தரின் செல்வாக்கு இன்னும் அப்படியே உள்ளது. பொது சேவை பற்றிய அவரது எண்ணங்கள் இன்று நம் மனதில் இருந்து வருகிறது.

முன்பெல்லாம் அரசியலுக்கு வந்தால் இளைஞர்கள் சீரழிந்துவிடுவார்கள் என்று கூறுவார்கள். இன்று நேர்மையானவர்களும் அரசியலுக்கு நுழைவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. குடும்ப அரசியலை முடிவுக்கு கொண்டுவரவும், ஜனநாயகத்தை காப்பாற்றவும் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அரசியலில் தங்கள் குடும்பத்தின் இருப்பை நிலைநாட்டி கொள்ளவே சிலர் அரசியல் செய்கின்றனர். அவர்களுக்கு தேசிய நலனைவிட தன் குடும்பத்தின் ஆதாயம் முக்கியம்.

மேலும், நேர்மை மற்றும் செயல்திறன் இன்றைய அரசியல் களத்தில் முதல் கட்டாய நிபந்தனையாக மாறி வருகிறது. எந்தவொரு பேராசையும் இல்லாமல் அரசியலில் நுழைந்து குடும்ப அரசியலை ஒழிக்குமாறும், ஜனநாயகத்தை காப்பற்றுமாறும் பிரதமர் மோடி நாட்டின் இளைஞர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்