வால்பாறையில் கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி..!

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிக அளவு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அங்குள்ள மலைப்பிரதேசமான வால்பாறையிலும் கொரோனா பாதிப்பு தீவிரமடைவதால் இதனை தடுக்கும் பொருட்டு வெளியில் யாரும் சுற்றித்திரியாமல் பாதுகாக்கும் பணியில் காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். வால்பாறையில் உள்ள அரசு கல்லூரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கு 32 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சையை மருத்துவர்கள் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு மன தைரியத்தை அதிகரிக்கும் பொருட்டும் அவர்களின் ஆக்சிஜன் அளவை அதிகரிப்பதற்காகவும் யோகா பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த யோகா பயிற்சியினை வால்பாறை அரசு மருத்துவமனையின் இயற்கை பிரிவு மருத்துவர் கார்த்திகேஷ் வந்து கற்று தருகிறார். நோயாளிகளும் இதை செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இதுகுறித்து சுகாதார அதிகாரி பேசிய பொழுது, வால்பாறை கொரோனா வார்டில் குறைந்த அறிகுறிகளுடன் இருக்கும் கொரோனா நோயாளிகளே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் இவர்களுக்கு ஆக்சிஜன் அளவை அதிகரிக்கவும், மனதை ஒருநிலைப்படுத்தி தைரியமாக வைத்து கொள்வதற்கும் இந்த யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.