வரலாற்றில் இன்று(15.05.2020)..மனிதனை மனிதனாக்கும் அமைப்பான சர்வதேச குடும்ப தினம் இன்று...

வரலாற்றில் இன்று(15.05.2020)..மனிதனை மனிதனாக்கும் அமைப்பான சர்வதேச குடும்ப தினம் இன்று...

மனிதன் தன் வாழ் நாளில்  தொடர்ந்து உயிர்ப்புடன்  இயங்குவதற்கு அடிப்படை ஆதாரமாக இருப்பது குடும்ப என்ற அமைப்பு தான். குடும்பம் ஒவ்வொரு மனிதனின் தேடலையும், சாதனைகளையும் படைப்பதற்கு ஊக்க சக்தியாக இருக்கும். இன்று சர்வதேச குடும்பதினம், இதுகுறித்த சிறப்பு தொகுப்பு. குடும்பம் என்பது குடு + இன்பம் , அதாவது இன்பங்களைத் தரும் இடங்கள் குடும்பங்களே. எப்படி  பெற்ற தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லையோ, தெய்வங்கள் எல்லாம் தோற்றுப் போகும் தானே தந்தையின் அன்பு முன்னே. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் தானே..பிள்ளைக் கனி அமுது தானே.இவையனைத்தும் சேர்ந்த நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் தானே.. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அம்மாவை நேசிக்கும் ஒவ்வொரு பிள்ளையும் பின்னாளில்  மனைவியையும் நேசிப்பான். வீட்டில் தட்டிக் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தை தட்டிக் கொடுத்து வளர்க்கிறான் தன் குழந்தையை. குடும்ப பண்புகளை குழந்தைகளுக்கு கற்றுத் தாருங்கள். 'கண்ணுக்குள்ளே வைச்சு வளர்த்திட்டேன்,பொத்தி பொத்தி வளர்த்துட்டேன்' என வயிற்றுக்கு வெளியேயும் கருப்பை சுமந்து வளர்க்கப்படும் குழந்தைகள், குடும்ப கஷ்டங்களை உணர்வதில்லை. சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட தலை முறைகளின் வலிகள், இன்று சாப்பிடுவதற்கே கஷ்டப்படும் நவ நாகரிகத் தலை முறைகளுக்குப் புரியாது தான். குடும்ப உறவுகளின் உன்னதங்களையும்,வலிகளையும் அனுபவிக்கும்  குழந்தைகளே பெற்றோரின் முதுமைக் காலத்தில் அவர்களைக் காப்பாற்றுகின்றனர். வாய் விட்டு சிரித்தால் மட்டுமல்ல மனம் விட்டுப் பேசினால் கூட நோய் விட்டுப் போகும். 'எனக்கு ஒன்னுனா கேக்குறதுக்கு எங்க தாய் மாமா இருக்காரு' என்று கெத்து காட்ட முடிவதில்லை இன்று. காரணம் தனிக் குடும்ப அமைப்பு. தானாடாவிட்டாலும் தன் தசை ஆடும். கூட்டுக் குடும்ப உறவுகளாலே தான் இந்தப் பழமொழி சாத்தியமாகும். ஆனால் தற்போது குடும்பம் என்றால் கணவன், மனைவி, குழந்தை என மிகச்சிறிய வட்டத்திற்குள் சுருங்கிவிட்டது. பெற்றோர்களும் தன் குழந்தைகளை மாமியார், நாத்தனார் இல்லாத குடும்பத்தில் திருமணம் செய்துவைக்கவே விரும்புகின்றனர். இதனால் குடும்ப அமைப்பே சிதைந்து போகிறது. இப்படி பெற்றோரை கைவிட்டுவிட்டு எப்படி அவர்களால் மகிழ்வுடன் இருக்க முடிகிறது என்று தெரியவில்லை. பெற்றோர்களை முதியோர் இல்லங்களிலும் தெருவிலும் விட்டுவிட்டு இன்று மகிழ்வுடன்  இருக்கும் அனைவருக்கும் காலச்சக்கரம் சுழன்றுகொண்டே இருக்கிறது என்பதை யாரும் மறக்க வேண்டாம். அவரவர் கர்ம பலண்களை அவரவர் அடைந்தே தீர்வோம்.