எச்சரிக்கை!நீண்ட நேரம் வேலை செய்தால் இதய நோய்,பக்கவாத பாதிப்பு ஏற்பட்டு உயிரிழக்க நேரிடும் – WHO தகவல்…!

ஒரு வாரத்தில் 55 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தால் இதய நோய் மரணம்,பக்கவாத பாதிப்பு போன்றவை ஏற்படும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பானது (WHO) திங்களன்று (மே 17, 2021) நீண்ட  நேரம் வேலை செய்வதால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்பட்டு அதனால் இறப்புகல் அதிகரித்து வருவதாகக் கூறியுள்ளது.

முன்னதாக,2000 மற்றும் 2016 ஆம் ஆண்டு WHO மேற்கொண்ட ஆய்வின்படி, நீண்ட நேரம் வேலை செய்வதால் இதய நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை 42% ஆகவும்,பக்கவாதத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை 19% ஆகவும் அதிகரித்தது.

இதனையடுத்து,நீண்ட நேரம் வேலை செய்வதோடு தொடர்புடைய உயிர் இழப்பு மற்றும் ஆரோக்கியம் குறித்த முதல் உலகளாவிய சோதனையில்,WHO மற்றும் ILO மதிப்பிட்டுள்ள அறிக்கையின்படி,ஒரு வாரத்தில் குறைந்தது 55 மணி நேரம் வேலை செய்ததன் விளைவாக, 2016 ஆம் ஆண்டில் 55 லட்சம் பேர் பக்கவாதத்தால் இறந்ததாகவும், இதய நோயால் 3.47 லட்சம் பேர் இறந்ததாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும்,இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறுகையில்,”நீண்ட நேரம் வேலை செய்வதால் ஏற்படும் நோயானது குறிப்பாக ஆண்களுக்கு அதிக அளவில் ஏற்படுகிறது”,என்று தெரிவித்துள்ளது.

இதனைதொடர்ந்து,தற்போதைய ஆய்வின்படி,ஒரு வாரத்துக்கு 35 முதல் 40 மணிநேரம் வேலை செய்பவர்களைக் காட்டிலும்,55 மணி நேரம் அல்லது அதற்கும் அதிகமான நேரம் வேலை செய்பவர்களுக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு 35 சதவிகிதமும்,இதய நோயால் உயரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 17 சதவிகிதமும் கூடுதலாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் இணைந்து உலக சுகாதார அமைப்பு மேற்கொண்ட இந்த ஆய்வு, இவ்வாறு நீண்ட வேலை நேரம் காரணமாக உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் 45 முதல் 79 வயதிற்குட்பட்ட நடுத்தர வயது ஆண்கள் அல்லது முதிய ஆண்களாக உள்ளனர் என்கின்றது.

இருப்பினும்,கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்தை இந்த ஆய்வுக்கு உட்படுத்தவில்லை என்றாலும் ஒரு நாட்டில் தேசிய அளவில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் பொழுது வேலை செய்யும் நேரம் 10 சதவிகிதம் அளவுக்கு அதிகரித்து அதனால் உடலுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளன என்றும்,அதனால்,பொருளாதார நெருக்கடி உள்ள காலகட்டத்தில் பணியாளர்களின் வேலை நேரத்தை அதிகரிக்காமல் இருப்பது ஓர் நல்ல முடிவு என்றும் உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப அலுவலர் ஃப்ராங்க் பேகா தெரிவித்துள்ளார்.

மேலும்,தொழிலாளர்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க அரசாங்கங்கள், முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் எடுக்கக்கூடிய மூன்று நடவடிக்கைகளை பற்றி WHO கூறியதாவது:

1. கட்டாய அதிக வேலை நேரத்தைத் தடைசெய்யும் மற்றும் வேலை நேரத்தின் அதிகபட்ச வரம்புகளை உறுதிசெய்யும் சட்டங்கள், ஒழுங்குமுறைகள் மற்றும் கொள்கைகளை அரசாங்கங்கள் அறிமுகப்படுத்த வேண்டும்.

2. முதலாளிகள் மற்றும் தொழிலாளர் சங்கங்களுக்கிடையில் வேலை நேரம் குறித்து ஒப்பந்தங்கள் செய்யப்பட வேண்டும்.

3. வேலை செய்யும் நேரங்களின் எண்ணிக்கை வாரத்திற்கு அதிக பட்சமாக 55 மணி நேரம் அல்லது அதற்கு மேல் ஏறக்கூடாது என்பதை உறுதிப்படுத்த  வேண்டும்.