உலக சுகாதார அமைப்புக்கு வழங்கும் நிதியை நிறுத்தப்போவதாக ட்ரம்ப் எச்சரிக்கை.!

உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரசால், அமெரிக்கா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், ஈரான் போன்ற நாடுகளில் பாதிப்பும், பலியும் உயர்ந்துகொண்டே செல்கிறது. உலகிலேயே அமெரிக்காவில் தான் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. கொரோனாவின் தீவிரத்தை குறைத்து மதிப்பிட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தற்போது வைரஸ் அசுர வேகத்தில் பரவத் தொடங்கியதும் சுகாதார நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளார்.

மேலும் கொரோனா வைரஸ் மனிதர்கள் மூலம் மனிதர்களுக்கு பரவும் என்ற விஷயத்தை சீனா மறைத்துவிட்டதாகவும், உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், அப்போது மீண்டும் உலக சுகாதார அமைப்பை குற்றம்சாட்டினார். கொரோனா வைரஸ் குறித்து பல தகவல்கள் முன்பே வெளியானாலும் அவற்றையெல்லாம் உலக சுகாதார நிறுவனம் அலட்சியப்படுத்தி விட்டதாக கூறினார்.

உலக சுகாதார அமைப்பு அமெரிக்காவிடமிருந்து ஏராளமான பணத்தைப் பெறுகிறது. சீனா மீது பயணத் தடை விதிக்க வேண்டும் என தாம் கூறியபோது அதை ஏற்காமல் விமர்சனம் செய்து, உலக சுகாதார நிறுவனம் பெரிய தவறு செய்துவிட்டது. மேலும் கொரோனா குறித்த நிறைய விஷயங்களில் அவர்கள் (WHO) தவறாகவே பேசியிருகிறார்கள் என்றும் அவர்கள் சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவே தோன்றுகிறது. இதனால் உலக சுகாதார அமைப்புக்கு வழங்கும் நிதியை நாங்கள் நிறுத்தப் போகிறோம் என அதிபர் டிரம்ப் அதிரடியாக எச்சரித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்