தடுப்பூசிக்காக ஒதுக்கப்பட்ட 35,000 கோடி எங்கே? மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி!

தடுப்பூசிக்காக ஒதுக்கப்பட்ட 35,000 கோடி எங்கே? மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி!

இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொகள்ளாத மக்களுக்கு எப்படி தடுப்பூசி செலுத்தப் போகிறீர்கள், ஏன் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கவில்லை என மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தாமாக முன்வந்து தாக்கல் செய்த உச்ச நீதிமன்றத்தின் வழக்கில் இன்று எழுத்து மூலமான இடைக்கால உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மத்திய அரசு உரிய தடுப்பூசி கொள்கை வகுக்காமல் தடுப்பூசி திட்டம் செயல்படுத்துவது குறித்து நீதிபதிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. அதாவது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரே சீராக தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யவில்லை எனவும், தடுப்பூசியை வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனால் தடுப்பூசி கொள்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும், டிசம்பர் 31 வரையில் வழங்கப்பட உள்ள தடுப்பூசி விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் மாநில அரசுகள் நேரடியாக வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசி வாங்க முடியுமா என்பது குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் எனவும் அதில் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கூறுகையில், கொரோனா மூன்றாம் அலையில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான மருத்துவ கட்டமைப்பு, அவர்களுக்கு வழங்கப்படக்கூடிய தடுப்பூசி குறித்த விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனை மூலமாக வழங்கப்படக்கூடிய தடுப்பூசி குறித்து கண்காணிக்க மத்திய அரசு ஏதேனும் திட்டம் வகுத்து உள்ளதா எனவும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் தடுப்பூசி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 35,000 கோடியை எப்படி அரசு செலவிட்டுள்ளது என்றும், இந்த நிதியிலிருந்து ஏன் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கவில்லை எனவும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி ஆய்வுக்கு மத்திய அரசு நிதி வழங்கிய நிலையில், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகளுக்கான விலையை அந்தந்த நிறுவனங்களே நிர்ணயிப்பதற்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது எனவும் மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

author avatar
Rebekal
Join our channel google news Youtube