கொரோனா மூன்றாம் அலை எப்போது தொடங்கும்? நிதி ஆயோக் உறுப்பினர் தகவல்!

  • கொரோனாவின் இரண்டாம் அலையை இந்தியா சிறப்பாக எதிர்கொண்டு உள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
  • செப்டம்பர் அல்லது ஆக்டொபரில் தொடங்கவுள்ள மூன்றாவது அலைக்கு தயாராக வேண்டும்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் மிக தீவிரமாக பரவி வந்த நிலையில் தற்போது கொரோனாவில் வீரியம் சற்று குறைந்துள்ளது என்று கூறலாம். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரையிலும் தினமும் 4 லட்சத்துக்கும் அதிகமான பாதிப்புகள் தொடர்ந்து பதிவாகி வந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் தினசரி பாதிப்பு ஒன்றரை லட்சத்துக்கு கீழே குறைந்துள்ளது. அதுபோல, தினசரி உயிரிழப்பும் முன்பை விட அதிகளவில் குறைந்துள்ளது.

இதன் மூலமாக இந்தியா கொரோனா இரண்டாம் அலையை சிறப்பாக நிர்வகித்து எதிர்கொண்டு இருப்பதாக நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.சரஸ்வத் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா முதல் அலையை இந்திய எதிர்கொண்ட விதம் மிக சிறப்பாக இருந்ததாகவும், அப்போது அமல்படுத்தப்பட்ட ஒழுங்குமுறைகள் இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதற்கு ஏராளமான நம்பிக்கையை கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

அதேசமயம் இரண்டாம் அலை குறித்து தொற்றுநோய் நிபுணர்கள் நடத்திய ஆய்வில் கொரோனா இரண்டாம் அலை விரியமானது என கூறவில்லை எனவும், ஆனால் அந்த காலகட்டத்தில் நடத்தப்பட்ட திருமண நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளால் தான் இரண்டாம் அலை மிக வேகமாக பரவியதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார். இருப்பினும் நாம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகளின் அடிப்படையில் ஆக்சிஜன் வங்கிகளை உருவாக்கி, ஆக்சிஜன் விநியோகத்திறகு தொழில்துறையின் உதவிகளை ஏற்படுத்திக்கொண்டு இரண்டாம் அலையினை சிறப்பாக நிர்வகித்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், நியாயமாக நாம் பணியாற்றி இருப்பதால் கொரோனாவை சிறப்பாக கையாண்டு இருப்பதால், புதிய தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா இரண்டாம் அலை தற்பொழுது குறைந்திருந்தாலும், கொரோனாவின் மூன்றாம் அலை தவிர்க்க முடியாதது என நிபுணர்கள் தெளிவாக தெரிவித்திருப்பதாகவும், இந்த மூன்றாம் அலை இளம் தலைமுறையினரை அதிகம் தாக்கும் என கூறப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த மூன்றாம் அலை செப்டம்பர் முதல் அக்டோபர் மாதங்களில் தொடங்கலாம் எனவும், இதை எதிர்கொள்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் நாம் சிறப்பாக மேற்கொள்வதுடன், மருத்துவ கட்டமைப்புகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal