புதிய சட்டவிதிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாட்ஸ் அப்..!

புதிய சட்டவிதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ் அப் நிறுவனம் முறையீடு செய்துள்ளது.

இந்திய அரசாங்கத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY),கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி,அனைத்து சமூக ஊடக நிறுவனங்களுக்கும் புதிய விதிகளை பிறப்பித்து அவற்றை பின்பற்ற மூன்று மாத கால அவகாசம் அளித்தது.

அதன்படி,இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கான ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும்,அந்த அதிகாரியின் பெயர் மற்றும் தொடர்பு முகவரியை அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்தது.

மேலும்,இந்த புதிய விதிகளை ஏற்றுக் கொள்ளாத சமூக வலைதளங்கள் இந்தியாவில் தடை செய்யப்படும் என்றும்,அதுமட்டுமின்றி குற்ற வழக்குகளும் பதிவு செய்யப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து,மத்திய அரசு கொடுத்த கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில்,பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனம்,சமூக வலைதளங்கள் குறித்து மத்திய அரசின் புதிய சட்ட விதிகளை ஏற்பதாக தெரிவித்தன.

இந்நிலையில்,வாட்ஸ்-அப் நிறுவனம் புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.அந்த முறையீட்டில் புதிய விதிகள் தனியுரிமை தகவல் பாதுகாப்புக்கு எதிரான செயல் மட்டுமல்லாமல் அரசியல் சட்டத்திற்கும் எதிரானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.எனவே,இந்த முறையீடு மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.