என்னது மீண்டுமா?….பேஸ்புக்,இன்ஸ்டாகிராம் சேவைகள் 2-வது முறையாக பாதிப்பு – மன்னிப்பு கேட்ட நிறுவனம் .!

ஒரே வாரத்தில் 2-வது முறையாக நேற்றிரவு மீண்டும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவைகள் பாதிக்கப்பட்டன.

பிரபல சமூக ஊடக தளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் சேவைகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அக்டோபர் 4 ஆம் தேதி முடக்கப்பட்டன.இதனால்,உலகம் முழுவதும் சுமார் ஒருகோடியே 6 லட்சம் பேர் தகவல்பரிமாற முடியாமல் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 6 மணி நேரத்திற்கு பிறகு பிரச்சனை சரிசெய்யப்பட்டு மீண்டும் இயங்க தொடங்கியது.

இதன் காரணமாக, பேஸ்புக்கின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன. மேலும், மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ.52,217 கோடி குறைந்தது.இதனால், உலக பணக்காரர்கள் பட்டியலில் மார்க் ஒரு இடம் பின்தங்கி ஐந்தாவது இடத்திற்கு சென்றுள்ளார். ஃபேஸ்புக்கின் பங்குகள் வீழ்ச்சியடைந்ததால், ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 122 பில்லியன் டாலராக உள்ளது.

இந்நிலையில்,ஒரே வாரத்தில் 2-வது முறையாக நேற்றிரவு மீண்டும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவைகள் பாதிக்கப்பட்டன.இதனால்,பயனர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டது.

இதனையடுத்து,சேவைகள் பாதிக்கப்பட்டது குறித்து பேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

“எங்கள் பயன்பாடுகள் மற்றும் தயாரிப்புகளை அணுகுவதில் சிலருக்கு சிக்கல் இருப்பதை நாங்கள் அறிவோம். முடிந்தவரை விரைவாக இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு நாங்கள் பணியாற்றி வருகிறோம், ஏதேனும் சிரமத்திற்கு மன்னிப்பு கோருகிறோம்.

எங்கள் தயாரிப்புகளை உங்களால் அணுக முடியவில்லை என்றால் நாங்கள் வருந்துகிறோம். ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள நீங்கள் எங்களை எவ்வளவு சார்ந்துள்ளீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் சிக்கலை சரிசெய்தோம் – இந்த வாரம் உங்கள் பொறுமைக்கு மீண்டும் நன்றி”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.