மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணியில் அதிமுக அங்கும் வகிக்கிறது என்று கூறினாலும், தமிழகத்தில் பாஜக – அதிமுக இடையே கருத்து மோதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை – அதிமுக இடையே கடும் வார்த்தை போர் நிலவி வருகிறது. பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் பாஜக கட்சி வளர்ச்சி அடைந்து வருகிறது என ஒருபக்கம் கூறப்பட்டாலும், அண்ணாமலை மீது பல்வேறு விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது.
ஏனென்றால், மறைந்த தலைவர்கள் குறித்து அண்ணாமலை கூறும் கருத்துக்கள் பாஜக – அதிமுக இடையே மோதலை உருவாக்கியுள்ளது. இதனால், அண்ணாமலைக்கு அதிமுகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து, இத்துடன் நிறுத்துக்கொள்ள வேண்டும் என அதிமுக மூத்த நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்தனர். அண்ணாமலையின் செயலால் அதிமுக – பாஜக கூட்டணி தற்போது இல்லை என்றும், தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து இருந்தார்.
இந்த சமயத்தில், பிரதமர் மோடியை தலைவராக ஏற்றுக் கொள்பவர்களை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், தமிழகத்தின் அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்பதை என்னால் கூற முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது அதிமுக – பாஜக இடையே மேலும் விரிசலை உண்டாகியுள்ளது. இதனால், பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்கினால் மட்டுமே கூட்டணி என்ற முடிவில் அதிமுக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், அண்ணாமலை – அதிமுக இடையே உள்ள விரிசலுக்கு முடிவு கட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் தங்கமணி, வேலுமணி, சி.வி சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி ஆகியோர் பாஜக தலைவர்களை சந்திக்க டெல்லி சென்றனர். இதன்பின் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
அதிமுக நிர்வாகிகளை சந்திக்க அமித்ஷா தரப்பு நேரம் ஒதுக்கவில்லை என கூறப்பட்டது. இதனை அடுத்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் அதிமுக நிர்வாகிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். அப்போது கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உடன் இருந்ததாக கூறப்பட்டது. மருபக்கம் டெல்லி சென்ற அதிமுக நிர்வாகிகள் சென்னை திரும்பினார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அதிமுக நிர்வாகிகள் சந்திப்பின்போது நான் கூட இல்லை, பேச்சுவார்த்தை குறித்து எனக்கு எதுவும் தெரியாது என தமிழகம் திரும்பிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் இன்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனை செய்தியாளர்கள் சூழ்ந்தனர். அப்போது, பத்திரிகையாளர்களை சந்திப்பது பற்றி எந்த திட்டமும் கிடையாது, திடீர் வந்திருக்கிறீர்கள் என விஷயம் என கேள்வி எழுப்பினார்.
அப்போது, டெல்லி பயணம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், நான் டெல்லி பயணம் செல்வது புதுசா? வாரத்திற்கு இரண்டு நாட்கள் டெல்லி சென்று வந்துகொண்டுதான் இருக்கிறேன், இதில் என்ன புதுசா இருக்கு என கேட்டார். இதன்பின் பேசிய அவர், மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சியில் இருந்து 24 மணிநேரத்தில் பிரதமருக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்ய வேண்டும் என மகளிர் அணி சார்பில் அழைப்பு விடுத்தார்கள்.
அதன்படி, மகளிர் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஒரு தலைவராக முன்னின்றி நடத்திவிட்டு திரும்ப என் தொகுதிக்கு வந்துள்ளேன். அவ்வளவுதான் என்றார். அதிமுக நிர்வாகிகள் – பாஜக தலைமை இடையே நடந்த பேச்சுவார்த்தையின் போது உடன் இருந்தது குறித்த கேள்விக்கு, ஒரு சில ஊடங்களில் பேச்சுவார்த்தையின் போது நான் உடன் இருந்ததாக ஒரு தவறான செய்தியை வெளியிட்டுள்ளனர். டெல்லியில் நேற்று மாலை முழுவதும் வேறு கூட்டங்கள், மற்ற தலைவர்கள் கூட்டங்கள் இருந்தது. நானும் மீடியாவை பார்த்து தான் தெரிந்துகொண்டேன்.
அதனால், அதிமுக – பாஜக இடையே நடந்த பேச்சுவார்த்தை குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஒவ்வொரு கட்சியும் இயங்கி கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் ஒரு இயக்கத்தில் இருக்கிறார்கள், கூட்டணியில் இருக்கிறார்கள். எப்போது தேவையோ, அப்போது பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அதனால், எனக்கு எதுவும் தெரியாது, பேச்சுவார்த்தையின்போது உடன் இருந்ததாக கூறுவது முற்றிலும் தவறான கருத்து என்றார்.
மகளிர் அணி சார்பாக பிரதமர் மோடிக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்திருந்தோம், இதனால் அதில் பங்கேற்க நான் மகளிர் அணி தலைவராக டெல்லி சென்றேன் என தெரிவித்தார். இதனை முடித்துவிட்டு உடனே நான் என் தொகுதிக்கு திரும்பிவிட்டேன். இன்று என் மண் என் மக்கள் யாத்திரியை என் தொகுதிக்கு வருகிறது. அதற்காக நான் இங்கு வந்துள்ளேன் என்றார். மேலும், கூட்டணி தொடர்பான எந்த கேள்வியாக இருந்தாலும், அதனை தேசிய தலைமை அறிவிக்கின்ற முடிவு தான் எனவும் கூறினார்.