மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு தமிழகத்தில் என்ன மரியாதை இருக்கிறது? ராமதாஸ் கண்டனம்!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு தமிழகத்தில் என்ன மரியாதை இருக்கிறது, ராமதாஸ் கண்டனம்.

கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி அரசு மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட அதே நாளில் ஆளுநரின் ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரையிலும் ஆளுனர் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பதாக டாக்டர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழைக் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்க கூடிய சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல், திருப்பி அனுப்பாமல் வைத்துக்கொண்டு முட்டுக்கட்டை போடுவது எந்த வகையிலும் நியாயம் அல்ல என கூறியிருந்தார் .

இந்நிலையில் இன்று ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை ஆளுநரால் தடுக்க முடியும் என்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தமிழகத்தில் என்னதான் மரியாதை? தமிழ் நாட்டில் நடப்பது மக்களாட்சியா? அல்லது ஆளுநர் ஆட்சியா? என கேள்வி எழுப்பி உடனடியாக விடை காணப்பட வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார். மேலும் இது தானாக ஏற்பட்ட தாமதம் அல்ல திட்டமிட்டு ஏற்படும் தாமதம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.