என் வாழ்க்கையை மாற்றியது அந்த ஒரு டெஸ்ட் போட்டி தான்-ஜடேஜா

2018 இல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் போட்டி தான் என் வாழ்க்கையையே மாற்றியது என்று ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2018 ஆம் ஆண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடியது. அதில் 5-ஆவது ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் இக்கட்டடான சூழ்நிலையில் ரவீந்திர ஜடேஜா எட்டாவது ஆட்டக்காரராக களமிறங்கினார். அந்த இன்னிங்சில் ஜடேஜா 86 ரன்கள் எடுத்து இந்திய அணியை சிரமத்திலிருந்து மீட்டார். இந்த போட்டியில் இவர் பெரும் புகழை அடைந்தார்.

இதுகுறித்து ஜடேஜா இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசிய போது, இங்கிலாந்துடன் விளையாடிய அந்த ஒரு டெஸ்ட் போட்டியே என் வாழ்க்கையை மாற்றியது. எனது திறமை மற்றும் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தியது. இங்கிலாந்து மண்ணில் அவர்களது பந்து வீச்சில் விளையாடிய ஆட்டம் எனக்கு இனி உலகில் எந்த மூலையிலும் விளையாடி ரன்களை குவிக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்தது என்று கூறியுள்ளார்.

மேலும், இந்திய ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஹர்திக் பாண்டியாவிற்கு ஒருமுறை காயம் ஏற்பட்டது. அதனால் இந்திய ஒருநாள் அணியில் மீண்டும் என்னை சேர்த்தனர். அதன் பிறகு என் வாழ்க்கை நல்லபடியாக இருக்கிறது. ஆனால், இந்திய அணியில் இடம் கிடைக்காத ஒன்றரை ஆண்டுகள் என் வாழ்க்கையில் தூக்கமின்றி என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தேன் என்று ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளார்.