வலுவிழந்த அசானி புயல்…150 கிமீ வரை காற்று – வானிலை மையம் எச்சரிக்கை!

வங்கக்கடலில் தீவிர புயலாக நிலை கொண்டிருந்த அசானி,தற்போது புயலாக வலுவிழந்துள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேலும்,ஆந்திராவின் மசிலிப்பட்டணத்திற்கு தென்கிழக்கே 90 கிமீ தொலைவில் அசானி புயல் நிலவுகிறது எனவும்,இது வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு மத்திய வங்காள விரிகுடாவை ஆந்திர கடற்கரைக்கு அருகில் காலை 11 மணிக்கு அடைந்து,பின்னர் திசை மாறி ஒடிசா கடலோரத்தை நோக்கி நகர்ந்து நாளை காலைக்குள் அசானி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால்,வடக்கு ஆந்திரா மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், 150 கிமீ வரை காற்று வீசக்கூடும்,கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும்,மீனவர்கள் இன்று மற்றும் 12 ஆகிய தேதிகளில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி,வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.மேலும்,தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் கனமழை மற்றும் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.