“கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது என்ற கருத்தை நீக்க மாட்டோம்” – பேஸ் புக்…!

“கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது என்ற கருத்தை நீக்க மாட்டோம்” ,என்று பேஸ் புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில்,இதனைத் தொடர்ந்து,சமூக ஊடகங்கள் அதன் கொள்கையின் ஒரு பகுதியாக,கொரோனா பரவல் குறித்த தவறான தகவல்கள் தங்கள் தளங்களில் பரப்பப்படுவதை தடை செய்தன.

இந்நிலையில்,கடந்த 2019-ம் ஆண்டில் கொரோனா பரவுவதற்கு முன்பாகவே சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் உள்ள மூன்று விஞ்ஞானிகள்,கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் என்ற ஆங்கில இதழ் தெரிவித்ததையடுத்து, கொரோனாவின் தோற்றம் குறித்து வந்த முழுமையான விசாரணைக்குப் பிறகு பேஸ்புக் நிறுவனமானது சில கொள்கை மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

அதன்படி,கொரோனா வைரஸின் தோற்றம் குறித்த புதுப்பிக்கப்பட்ட விவாதத்தின் காரணமாக,அந்தக் கொள்கையிலிருந்து நீங்குவதாகவும், பேஸ் புக் தளங்களில் பகிரப்பட்ட,கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது என்ற கருத்தை நீக்க மாட்டோம் என்றும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து,பேஸ் புக் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,”கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து பொது சுகாதார நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால்,கொரோனா வைரஸ் தொற்றானது மனிதனால் உருவாக்கப்பட்டது அல்லது ஆய்வகத்தால் தயாரிக்கப்பட்டதாகவே இருந்தாலும்,பேஸ்புக் தனது தளங்களில் வெளியிடப்பட்ட அந்தக் கருத்தை இனி அகற்றாது”, என்று தெரிவித்துள்ளார்.