“விவசாயிகளுக்கு சேவை செய்யவே மத்திய அரசு உள்ளது!”- பிரதமர் மோடி

வேளாண் சட்டத்திருத்த மசோதா இன்று நிறைவேற்றப்பட்ட நிலையில், விவசாயிகளுக்கு சேவை செய்யவே மத்திய அரசு உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பதவி விலகினார். மேலும், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதாக்களின் மீது நடைபெற்ற விவாதத்தின் போது எதிர்க்கட்சியினர், மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்து, சபாநாயகரின் மைக்கை உடைக்கச்சென்று, விதி புத்தங்களை கிழித்து எறிந்து கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் 10 நிமிடங்களுக்கு மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பின்னர் மீண்டும் அவை கூடிய நிலையில், அப்போதும் எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அதன்பின் மசோதாக்கள் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மாநிலங்களவையில் விவசாயிகள், வேளாண் விளைபொருட்கள் குறித்த சட்டத் திருத்த மசோதாக்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது.

இந்தநிலையில், விவசாயிகளுக்கு சேவை செய்யவே மத்திய அரசு உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரின் ட்விட்டர் பக்கத்தில் அவர், குறைந்தபட்ச ஆதார விலை, அரசே கொள்முதல் செய்யும் முறை தொடரும் என நான் மீண்டும் சொல்கிறேன் என தெரிவித்துள்ளார்.