
எடப்பாடி பழனிசாமி மதுவிலக்குக்காக இதுவரை என்ன போராட்டம் நடத்தியுள்ளார்? என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இவருடன் விழுப்புரம் எம்.பி.ரவிக்குமார், சிந்தனை செல்வன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய விசிக தலைவர், கள்ளச்சாராய புழக்கம் இந்த அளவுக்கு இருந்துள்ளது பெரும் அதிர்ச்சியை தருகிறது. வீடுகளுக்கே சென்றே விநியோகம் செய்யக்கூடிய நிலை இருந்திருக்கிறது. மது விற்பனையை அரசே கண்டும் காணாமல் இருப்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்தவே மது விற்பனையை அனுமதிக்கிறது என்ற அரசின் கருத்து ஏற்புடையது அல்ல. எனவே, மதுவிலக்கை உடனே நடைமுறைப்படுத்த முடியாது. ஆனால், படிப்படியாக அமல்படுத்த முடியும் என்றார்.
இதனைத்தொடர்ந்து பேசிய திருமாவளவன், கடந்த ஆட்சியில் மதுவுக்கு எதிராக கூட்டணி கட்சிகள் போராடவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளாரே என்ற கேள்விக்கு பதிலளித்தார். அவர் கூறுகையில், நாங்கள் கூட்டணி கட்சிதான், நாங்கள் மதுவிலக்கு வேண்டும் என குரல் கொடுக்கிறோமே. எடப்பாடி பழனிசாமி மதுவிலக்குக்காக இதுவரை என்ன போராட்டம் நடத்தியுள்ளார்? என கேள்வி எழுப்பினார்.
மதுவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி போராட்டம் நடத்தினால் இணைந்து போராட நாங்கள் தயாராக உள்ளோம். மதுவிலக்கை வலியுறுத்தி நாங்கள் போராட வேண்டும் என்பது சரிதான், அவ்வபோது மதுவிலக்கு குறித்து எங்கள் கருத்தை தெரிவித்து வருகிறோம். மேலும், மதுவுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது எனவும் தெரிவித்தார்.