சவாலை ஏற்கிறோம்.. முதலில் பிரதமருடன், கடைசில் வானதி சீனிவாசன் போன்ற துக்கடா தலைவர்களுடன் – ம.நீ.ம.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சவாலை ஏற்றுக்கொள்கிறோம் என மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் ஆதரித்து, நேற்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பைக் பேரணியில் பங்கேற்று வாக்கு சேகரித்தபின் பேசிய அவர், கமல்ஹாசன், வானதி சீனிவாசன் உடன் நேரடி விவாதத்தில் பங்கேற்க வேண்டும் தெரிவித்திருந்தார்.

மேலும், கொள்கைகள், தீர்வுகள், குறித்து விவாதித்தால் ஆட்சி செய்யும் நிர்வாகத் திறன் யாருக்கு உள்ளது என்பது தெரியவரும். திட்டங்கள் குறித்தும், மக்களுக்கு செய்யப்பட்டுள்ள சேவைகள் குறித்தும் விவாதிக்க கமல்ஹாசன் தயாரா? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சவாலை ஏற்றுக்கொள்கிறோம். முதலில் இந்தியாவை ஆளும் பிரதமர் மோடியுடன் எங்கள் தலைவர் கமல்ஹாசன் விவாதம் செய்ய விரும்புகிறார் என கூறியுள்ளார்.

இதனையடுத்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பின்னர் அடுத்தடுத்து பாஜக அமைச்சரவையினர் ஒவ்வொருவருடனும் விவாதம் செய்துவிட்டு கடைசியாக வானதி சீனிவாசன் போன்ற துக்கடா தலைவர்களுடன் வைத்துக்கொள்ளலாம். எனவே, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பிரதமருடனான நேரடி விவாதத்திற்கு ஏற்பாடு செய்யட்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, இருமுறை தேர்தலில் போட்டியிட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டு, இப்போது மூன்றாவது முறையாக தோற்க தயாராகிறவர் வானதி சீனிவாசன் என்றும் எந்த ஆளுமையும் இல்லாத அவரோடு விவாதிக்க எங்கள் மாணவர் அணியினர் போதும் எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்