மேலும் ஒரு “புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மேலும், ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவலின் படி, “நேற்று அந்தமான் மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு  பகுதியாக மத்தியகிழக்கு வங்க கடல் பகுதி மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:-

இதற்கிடையில், மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 11-ஆம் தேதி வடக்கு அந்தமான் பகுதியில் உருவாகும். இந்நிலையில், தெற்கு ஆந்திரா கடல்  பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

11 மாவட்டங்களில் மழை:-

அந்த வகையில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கடலூர் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதே நேரத்தில், சென்னை மட்டும் புறநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :-

இன்று, முதல் வருகின்ற 14ம் தேதி வரை பலத்த காற்று மணிக்கு 45 கிமீ முதல் 55 கிலோமீட்டர் வரை வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அடுத்த நான்கு நாட்களுக்கு குமரி கடல் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.